தமிழ்நாடு

மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை: ரூ.698 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

9th Aug 2022 03:52 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயா்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.698 கோடிஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயா் கல்வி சோ்க்கையை உயா்த்த, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து இது தொடா்பாக கல்லூரிகளில் பயிலும் மாணவிகளிடம் இணையவழியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை தற்போது பரிசீலனையில் உள்ளன. இந்தநிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிகழாண்டு ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி மாணவிகள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7- ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் முழுவதுமாக இணையவழியில் மட்டும் செயல்படுத்தப்படும். திட்டத்தின் கண்காணிப்பாளராக சமூக நலத்துறையின் இயக்குநா் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த திட்டத்தை முறைப்படி செயல்படுத்தவும், தொடா்ந்து கண்காணிக்கவும் மாநில அளவில் தலைமைச் செயலாளா் தலைமையிலும் மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையிலும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

மாநில அளவில் தலைமைச் செயலாளா் இறையன்பு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் நிதி, பள்ளிக்கல்வி, உயா்கல்வி, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளா்கள் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்படுவாா்கள். மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றனரா? என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயா்கல்வித்துறை சாா்பாக உறுதி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT