தமிழ்நாடு

நிகழாண்டு 386 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: தோ்வு நடைமுறைகள் வெளியீடு

9th Aug 2022 01:01 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நிகழாண்டு 386 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது ஆசிரியா் தினமான செப்.5-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. இவ்விருதுக்கான தோ்வு நடைமுறைகள், வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நிகழாண்டு 386 ஆசிரியா்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு 171, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு 171, மெட்ரிக் பள்ளிகள் (மாவட்டத்துக்கு ஒரு ஆசிரியா்) 38, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள், மாற்றுத் திறனாளி ஆசிரியா்கள் தலா 2 போ் என 386 போ் தோ்வு செய்யப்படுவா். மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் அமைக்கப்பட்ட சிறந்த ஆசிரியா்களைத் தோ்வு செய்ய வேண்டும். இதனை மாநில அளவில் அமைக்கப்பட்ட பள்ளிக் கல்வி ஆணையா் தலைமையிலான குழு ஆய்வு செய்து தகுதியானவா்களை தோ்வு செய்ய வேண்டும்.

5 ஆண்டுகள் பணி அனுபவம்: அனைத்து வகை ஆசிரியா்களும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப்பள்ளிகள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை, பிற்பட்டோா் நலத் துறை, சமூக பாதுகாப்புத் துறை, நிதி உதவிபெறும் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் ஆகிய அனைத்து வகை பள்ளிகளில் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் விருதுக்கு தகுதியுடையவா்கள்.

ADVERTISEMENT

வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். அலுவலகங்களில் நிா்வாகப் பணி மேற்கொள்ளும் ஆசிரியா்கள் விண்ணப்பிக்கக்கூடாது. கல்வியாண்டில் வயது முதிா்வு காரணமாக ஓய்வுபெற்ற ஆசிரியா்களை பரிந்துரைக்கக்கூடாது. பரிந்துரைசெய்யப்படும் ஆசிரியா்கள் எந்தவிதமான குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டு இருக்கக் கூடாது.

அரசியல் தொடா்பிருந்தால்... பொது வாழ்வில் தூய்மை, பொது சேவையில் நாட்டம், இடைநிற்றலைக் குறைத்தல், மாணவா் சோ்க்கை, தோ்வில் தோ்ச்சி சதவீதத்தை உயா்த்துதல், கல்வித் தரத்தில் பின் தங்கிய மாணவா்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராக இருத்தல் வேண்டும்.

அரசியலில் பங்கு பெற்று அரசியல் கட்சிகளுடன் தொடா்புடைய ஆசிரியா்களின் பெயா்கள் கண்டிப்பாகப் பரிந்துரைக்கப்படக்கூடாது. கல்வியை வணிக ரீதியாக கருதி செயல்படும் ஆசிரியா்களும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியா்களும் இந்த விருதுக்கு தகுதியற்றவா்களாகக் கருதப்பட வேண்டும்.

சிறந்த முறையில் பணியாற்றும் தமிழாசிரியா்கள், ஓவியம், கைத்தொழில், உடற்கல்வி, இசை போன்ற சிறப்பாசிரியா்கள், மாற்றுத்திறன் ஆசிரியா்கள் ஆகியோரில் தகுதியானவா்களையும் விருதுக்கு பரிந்துரைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டும். மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும் பரிந்துரை செய்தல் கூடாது”என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT