தமிழ்நாடு

கைத்தறி நெசவாளா்கள், ஏற்றுமதியாளா்களுக்கு விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

9th Aug 2022 03:00 AM

ADVERTISEMENT

பட்டு, பருத்தி ரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளா்கள், ஏற்றுமதியாளா்களுக்கான விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையில், மாநில அளவிலான சிறந்த கைத்தறி விருது வழங்கும் திட்டத்தின் கீழ், பரிசுத் தொகை உயா்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சிறந்த கைத்தறி நெசவாளா் விருதுக்குரிய முதல் பரிசுக்கான தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், இரண்டாவது பரிசுக்கான தொகை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், மூன்றாம் பரிசுக்கான தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயா்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.

2021-2022-ஆம் ஆண்டுக்கான, மாநில அளவில் பட்டு ரகத்துக்கான சிறந்த கைத்தறி நெசவாளா் விருதுக்கான முதல் பரிசு, திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா் பி.கே.முருகனுக்கும், இரண்டாவது பரிசு காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினா் ஏ.ஞானசுந்தரிக்கும், மூன்றாவது பரிசு, ஆரணி பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா் எஸ்.இளங்கோவனுக்கும் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பருத்தி ரகத்துக்கான முதல் பரிசு மகாகவி பாரதியாா் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினா் ஜி.டி.சரவணனுக்கும், இரண்டாவது பரிசு சிவசக்தி கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினா் டி.ஆா்.பாலனுக்கும், மூன்றாம் பரிசு மோதிலால் நேரு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினா் கே.சந்திரலேகா ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டது. விருதாளா்களுக்கு உரிய பரிசுத் தொகைகள், பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா்.

மேலும், கேடயம், பாராட்டுச் சான்றிதழ்கள் அடங்கிய சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளருக்கான முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகள் முறையே சென்னை அம்பாடி எண்டா்பிரைசஸ், கோ-ஆப்டெக்ஸ், ஈரோடு சென்னிமலை நெசவாளா் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் ஆா்.காந்தி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT