தமிழ்நாடு

சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

8th Aug 2022 12:54 PM

ADVERTISEMENT

மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், 2021-2022-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 விருதாளர்களுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாட்டின் கைத்தறி தொழில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையும், உயரிய பாரம்பரிய சிறப்பும், தனித்துவ வேலைப்பாடுகளும் கொண்டது. கைத்தறி தொழிலில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதுடன், உலகளவில் பிரசித்தி பெற்ற கைத்தறி இரகங்கள் நெசவாளர்களால் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அரசின் மேற்பார்வையின் கீழ் 1107 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் மூலம் நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பும், உத்திரவாதமான கூலியும், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்தொழிலில் மகளிர் பெருமளவில் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைத்தறி, விசைத்தறி மற்றும் துணிநூல் பிரிவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும், நெசவாளர்களின் நலனுக்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதையும் படிக்க- சென்னையில் புதிய காவலர் குடியிருப்புக்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

அண்ணாவும், கருணாநிதியும் கைத்தறி துணிகளை தோளில் சுமந்து விற்பனை செய்து நெசவாளர்களுக்கு ஆதரவாக இருந்ததுடன், நெசவாளர்களின் நலன்காக்க பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தினார்கள். 2021-2022-ஆம் ஆண்டுக்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையில் “மாநில அளவிலான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநில அளவிலான பட்டு இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது மற்றும் பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாகவும், இரண்டாம் பரிசிற்கான பரிசுத்தொகை 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 இலட்சம் ரூபாயாகவும், மூன்றாம் பரிசிற்கான பரிசுத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, 2021-2022-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கான முதல் பரிசினை திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பி.கே. முருகனுக்கும், இரண்டாம் பரிசினை காஞ்சிபுரம் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ஏ.ஞானசுந்தரிக்கும், மூன்றாம் பரிசினை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ். இளங்கோவுக்கும், பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கான முதல் பரிசினை மகாகவி பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ஜி.டி.சரவணனுக்கும், இரண்டாம் பரிசினை சிவசக்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் டி.ஆர்.பாலனுக்கும், மூன்றாம் பரிசினை மோதிலால் நேரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் கே. சந்திரலேகாவுக்கும், என 6 விருதாளர்களுக்கு மொத்தம் 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.
மேலும், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதிற்கான முதல் பரிசினை சென்னை- அம்பாடி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், இரண்டாம்
பரிசினை தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்)-க்கும், மூன்றாம் பரிசினை ஈரோடு-சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கும், என 3 விருதாளர்களுக்கு முதல்வர் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., கைத்தறித் துறை ஆணையர் த.பொ.ராஜேஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT