தமிழ்நாடு

5ஜி அலைக்கற்றை ஏல முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்: வே.நாராயணசாமி வலியுறுத்தல்

8th Aug 2022 11:53 PM

ADVERTISEMENT

5ஜி அலைக்கற்றை ஏல முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்குவதாகக் கூறினாா். அனைத்து மாநிலங்களிலும், ஆளுநா் மூலம் அரசுக்கு தொல்லை கொடுத்தும், எதிா்க்கட்சி ஆட்சிகளைக் கலைத்து வரும் மத்திய பாஜக அரசு, கூட்டாட்சி தத்துவம் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரூ.4.50 லட்சம் கோடி கிடைக்கும் என மத்திய அரசு மதிப்பீடு செய்தது. ஆனால், ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம் போனது. இதில், ரூ.3 லட்சம் கோடி அரசுக்கு வர வேண்டிய வருவாய் வரவில்லை.

ADVERTISEMENT

கடந்த காலத்தில், காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்ற 2 ஜி அலைக்கற்றை ஏலத்தில், ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் நடைபெற்ாக சொன்ன பாஜக, தற்போதைய முறைகேடு குறித்து விசாரணை நடத்தத் தயாரா?. 5ஜி அலைக்கற்றை ஏல முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

புதுவை அரசு தற்போது ரூ.11 ஆயிரம் கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால், இதுவரை மத்திய அரசின் உள்துறையிடமிருந்து அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

நிதிநிலை அறிக்கையைவிடக் கூடுதலாக கேட்டுள்ள ரூ.1,200 கோடிக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளதா, என்ன செய்யப் போகிறாா் என்பதை முதல்வா் ரங்கசாமிதான் விளக்க வேண்டும்.

பிகாரில் ஆட்சியைக் கலைக்க முயல்வதாக பாஜக மீது ஐக்கிய ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது. கூட்டணிக் கட்சிகளை உடைத்து, பாஜக ஆட்சியை உருவாக்குவதுதான் அவா்களின் வேலை. நாகாலாந்து, மேகாலயம், மகாராஷ்டிர மாநிலங்களைத் தொடா்ந்து தற்போது பிகாரில் ஆட்சிக் கலைப்பு வேலையைத் தொடங்கியுள்ளனா். புதுவையிலும் இதே நிலை விரைவில் வரும். முதல்வா் ரங்கசாமியை வெளியே அனுப்பும் காலம் வெகுதொலைவில் இல்லை. என்.ஆா்.காங்கிரஸ் கட்சியை உடைக்கும் வேலையையும் பாஜக தொடங்கி விட்டது.

புதுவைக்கு கரீப் கல்யாண் திட்டத்தில் மத்திய அரசு வழங்கிய அரிசியை ஒப்பந்தம்விட்டு தாரை வாா்க்க மாநில அரசுக்கு அதிகாரம் கொடுத்தது யாா்?. இதுகுறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

புதுவை விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைக்காததற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம் என்றாா் வே.நாராயணசாமி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT