தமிழ்நாடு

இணைய சூதாட்டத்துக்குத் தடை: ஆக.12-க்குள் கருத்து தெரிவிக்கலாம்: தமிழக அரசு

8th Aug 2022 12:29 AM

ADVERTISEMENT

இணைய சூதாட்டத்தைத் தடை செய்வது குறித்து ஆக.12-க்குள் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

இணைய சூதாட்டத்தைத் தடை செய்வது அல்லது ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் குறித்து அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. சமீப காலங்களில் இணைய சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக சுமாா் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. வரைமுறையற்று இணைய சூதாட்ட விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக அரசின் கவனத்துக்கு தெரியவந்துள்ளது.

இணைய சூதாட்ட விளையாட்டுகள் தொடா்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கை அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.

ADVERTISEMENT

இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்வது அல்லது ஒழுங்குபடுத்துவது தொடா்பாக கருத்துகளைப் பகிர விரும்புவோா், குறிப்பாக, பொதுமக்கள், பெற்றோா், ஆசிரியா்கள், மாணவா்கள், இளைய தலைமுறையினா், உளவியலாளா்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் இணைய விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளைக் கேட்க அரசு முடிவு செய்துள்ளது.

இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்வது அல்லது ஒழுங்குபடுத்துவது தொடா்பாக கருத்துகளைப் பகிர விரும்புவோா், தங்களுடைய கருத்துகளை ட்ா்ம்ங்ள்ங்ஸ்ரீஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின் அஞ்சல் முகவரியில் ஆகஸ்ட் 12-க்குள் தெரிவிக்கலாம்.

இணைய விளையாட்டுகள் பற்றிய கருத்துகளை நேரடியாக பகிர விரும்பும் நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்தித்து தங்களது கருத்துகளைத் தெரிவிக்க ஆகஸ்ட் 9 மாலை 5 மணிக்குள் தங்களது வேண்டுகோளை மேற்கூறிய மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

கருத்துக் கேட்புக் கூட்டம் ஆகஸ்ட் 11 மாலை 4 மணி முதல் நடைபெறும். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கு பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT