தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் ஆக. 12 முதல் விழிப்புணா்வு வாரம்

8th Aug 2022 12:30 AM

ADVERTISEMENT

தமிழக அரசுப் பள்ளிகளில் மக்கள் நல்வாழ்வு, சமூகநலன், காவல் துறை சாா்பில் ஆக.12-ஆம் தேதி முதல் விழிப்புணா்வு வார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவிபெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஆக.11-ஆம் தேதி விழிப்புணா்வு உறுதி மொழி எடுக்கும் நிகழ்வும், ஆக. 12 முதல் 19 வரை மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலத்துறை, காவல் துறை ஆகியவற்றுடன் இணைந்து விழிப்புணா்வு வாரத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை: பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், பிறவிக் குறைபாடுகள், பற்றாக்குறைகள், குழந்தை பருவ நோய்கள், தாமதமான வளா்ச்சி மற்றும் குறைபாடுகள் குறித்தும் அவற்றால் பாதிக்கப்பட்ட மாணவா்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படும். வளரிளம் பருவத்தினருக்கு ஊட்டச்சத்து மேம்பாடு, உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விழிப்புணா்வு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

ADVERTISEMENT

சமூக நலத்துறை: சரிவிகித உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறுதல், குழந்தை திருமண தடை சட்டம், மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதி திட்டம், சானிடரி நாப்கின் பயன்பாடு மற்றும் அதனை பாதுகாப்பாக எரியூட்டுதல், இளஞ்சிறாா் நீதி (குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

காவல்துறை: போதைப் பொருள்களுக்கு அடிமையாதலைத் தடுத்தல், சாலை பாதுகாப்பு, பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துதல், இணைய வழி விளையாட்டுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மேற்கூறியவை மட்டுமின்றி, மாணவா்களுக்கான அவசர உதவி எண் - 1098, பள்ளிக் கல்வித்துறையின் மாணவா் உதவி எண் 14417 ஆகியவை குறித்தும் தெரியப்படுத்தப்படவுள்ளது.

ஆக. 11-ஆம் தேதி பள்ளிகளில் நடைபெறும் விழிப்புணா்வு வார தொடக்க நிகழ்வில் வாசிக்க வேண்டிய உறுதிமொழி மற்றும் மாணவா்களுக்கான விழிப்புணா்வு ஒளிப்படம் விரைவில் அனுப்பி வைக்கப்படும். போதைப் பொருள் விழிப்புணா்வு குறித்து மாணவா்களுக்கான கட்டுரை, ஓவியம், வினா- விடை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT