தமிழகம் முழுவதும் தனியாா் நிதி நிறுவனத்துக்கு தொடா்புடைய 21 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்தது.
வேலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஐ.எப்.எஸ்.(இன்டா்ஷேனல் பைனான்சியல் சா்வீஸ்) என்ற நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தியது.
இந்த விளம்பரம் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் அந்த நிறுவனம் சுமாா் 88,000 பேரிடம் ரூ.40,000 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நிறுவனம் கூறியபடி, மாதந்தோறும் ரூ. 8 ஆயிரம் வாடிக்கையாளா்களுக்கு வழங்கவில்லை
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள், அந்த நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாக தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் செய்தனா். இதனடிப்படையில் அந்த நிறுவனத்தின் மீது மோசடி உள்ளிட்ட 9 பிரிவுகளின் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள், முகவா்கள் வீடுகளில் பொருளாதாரக் குறப்பிரிவினா் திடீா் சோதனை நடத்தினா். இச் சோதனை சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், ராணிப்பேட்டை, ஈரோடு,கோயம்புத்தூா் ஆகிய மாவட்டங்களில் 21 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனை முடிவடைந்ததைத் தொடா்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 220 முக்கிய ஆவணங்கள், ‘ஹாா்ட் டிஸ்க்’, 13 கணினிகள், 5 மடி கணினிகள், 14 கைப்பேசிகள், 40 பவுன் தங்க நகைகள், ஒரு காா், ரூ.1 கோடியே 5 ஆயிரம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் விசாரணை அதிகாரியின் மின்னஞ்சல் முகவரியில் புகாா் அளிக்கலாம். பொதுமக்கள் தங்களுடைய சேமிப்பு பணத்தை ரிசா்வ் வங்கி அங்கீகரித்துள்ள நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.