தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தேர் மின் விபத்து தொடர்பாக ஒரு நபர் குழு விசாரணை அலுவலர் குமார் ஜெயந்த் சனிக்கிழமை பிற்பகல் விசாரணையைத் தொடங்கினார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி அதிகாலை தேர் மின் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 17 மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
களிமேடு கிராமத்தில் விபத்துக்குள்ளான தேரை பார்வையிட்ட ஒரு நபர் விசாரணைக் குழு அலுவலர் குமார் ஜெயந்த்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்காக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த் என்பவர் ஒரு நபரை விசாரணைக்கு அலுவலராக தமிழக அரசு நியமித்தது.
இதைத்தொடர்ந்து, களிமேடு கிராமத்தில் விபத்துக்குள்ளான தேரை ஒரு நபர் விசாரணைக் குழு அலுவலர் பார்வையிட்டார். மேலும் கிராம மக்களிடம் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
களிமேடு கிராம மக்களிடம் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த விவரங்களைக் கேட்டறியும் குமார் ஜெயந்த்.
பின்னர் செய்தியாளர்களிடம் அலுவலர் தெரிவித்தது:
களிமேடு கிராமத்தில் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் இருப்பேன். தகவல் தெரிவிக்க விரும்பும் மக்கள் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
இங்கு சேகரிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருப்பதற்கான ஆலோசனைகள் கொண்ட அறிக்கை தயாரிக்கப்படும். இதனால் அறிக்கை தயார் செய்து தாக்கல் செய்வதற்கு சில நாள்களாகும் என்றார் குமார் ஜெயந்த்.
களிமேடு கிராமத்தில் விபத்துக்குள்ளான தேரை பார்வையிடும் விசாரணைக் குழு அலுவலர் குமார் ஜெயந்துடன் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
இந்த விசாரணையின்போது மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க | உள்கட்சி விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருப்பது வாடிக்கை: எடப்பாடி பழனிசாமி பேட்டி