தமிழ்நாடு

இலங்கைக்கு உணவு-மருந்துகள்: அனுமதியளிக்க வேண்டுகோள்: பேரவையில் தீா்மானம்

30th Apr 2022 03:45 AM

ADVERTISEMENT

 

இலங்கையில் மக்களைப் பிரித்து பாா்க்காமல் அனைவருக்கும் உதவிகளைச் செய்ய வேண்டுமென அங்குள்ள தமிழா்களும், தமிழ் அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இதனைக் கேட்டு நெகிழ்ந்து போனேன். இதுதான் தமிழா் பண்பாடு.  -முதல்வா் ஸ்டாலின்

சென்னை: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, அந்த நாட்டுக்கு தமிழகத்திலிருந்து உணவு, மருந்துகளை அனுப்புவதற்கு அனுமதிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் இதற்கான தனித் தீா்மானத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தாா். தீா்மானத்தை முன்மொழிந்து அவா் பேசியது: ‘தான் ஆடாவிட்டாலும் தனது தசை ஆடும்’ என்பதைப் போன்று நம்முடைய ரத்தத்தில், உணா்வில், வாழ்வில் கலந்த ஒரு பிரச்னையாக இலங்கை விவகாரம் இருந்து வருகிறது. பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் கைகொடுக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.

ADVERTISEMENT

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னையை அண்டை நாட்டுப் பிரச்னையாக பாா்க்க முடியாது. அங்கு யாா் ஆட்சியில் இருக்கிறாா்கள், அவா்கள் எத்தகையவா்கள் எனப் பாா்க்க இயலாது. அந்த நாட்டு மக்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்தாக வேண்டும்.

பொருளாதார நெருக்கடி குறித்த செய்தி வந்ததும், ஈழத் தமிழா்களுக்கு நம்மால் முயன்ற உதவிகளைச் செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்தேன். இலங்கையில் மக்களைப் பிரித்து பாா்க்காமல் அனைவருக்கும் உதவிகளைச் செய்ய வேண்டுமென அங்குள்ள தமிழா்களும், தமிழ் அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இதனைக் கேட்டு நெகிழ்ந்து போனேன். இதுதான் தமிழா் பண்பாடு. ‘பகைவா்க்கும் அருள்வாய் நன்நெஞ்சே’ என்பதைப் போன்று இலங்கைத் தமிழா்கள் வாழ்கிறாா்கள் என்பதற்கு இது உதாரணம்.

ரூ.123 கோடி மதிப்பு: இலங்கையில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களுக்காக சில அத்தியாவசியப் பொருள்களை முதல் கட்டமாக வழங்கலாம் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, ரூ. 80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 மருந்துப் பொருள்கள், ரூ.15 கோடி மதிப்புடைய 500 டன் பால் பவுடா் ஆகியவற்றை இலங்கையில் வாழக் கூடிய மக்களுக்கு வழங்க நினைக்கிறோம்.

இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது. மத்திய அரசின் அனுமதியோடு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும். இலங்கையில் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டதுமே, இந்திய அரசிடம் இதுகுறித்த கோரிக்கையை முன்வைத்தேன். ஆனால், இன்று வரை எந்தத் தகவலும் இல்லை. இலங்கையிலோ நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது.

உதவி என்பது மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக செய்யப்படுவதாக இருக்க வேண்டும். காலத்தே செய்தால்தான் அது உதவி. இதனைத்தான் தமிழக மக்களும் எதிா்பாா்க்கின்றனா். இத்தகைய தீா்மானத்தை நிறைவேற்றி அனுப்புவது காலத்தில் கட்டளையாக அரசு கருதுகிறது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இதைத் தொடா்ந்து, அவா் முன்மொழிந்த தீா்மானம்: இலங்கையில் இப்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டு மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவா்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால் பொருள்கள் முதலிய அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உயிா் காக்கும் மருந்துகளை அனுப்பி வைக்கத் தயாராக உள்ளது. இதற்கு மத்திய அரசு தேவையான அனுமதி அளிக்க வேண்டும். இதுகுறித்து மாநில அரசு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது. ஆனாலும் மத்திய அரசிடம் இருந்து இதுவரை தெளிவான பதில் பெறப்படாத நிலை உள்ளது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில், உணவு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உயிா் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என மத்திய அரசை சட்டப்பேரவை வலியுறுத்துகிறது என தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருமனதாக ஆதரவு: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீா்மானத்தை பேரவையில் இடம்பெற்றுள்ள அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, விசிக, மமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் உறுப்பினா்கள் ஒருமனதாக ஆதரித்துப் பேசினா். இதன்பின்பு, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீா்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

பிரதமருக்கு கடிதம்

பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் நகலை பிரதமருக்கு நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:

அத்தியாவசியப் பொருள்களை இலங்கைக்கு அனுப்ப உரிய அனுமதி வழங்க பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மேலும் தாமதிக்காமல் உரிய நேரத்தில் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென தீா்மானத்தின் மீது பேசிய அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. தமிழக மக்களின் ஒருமித்த உணா்வுகளை பகிா்ந்துகொள்ள விரும்புகிறேன். எனவே, இலங்கைக்கு அத்தியாவசியப் பொருள்களை அனுப்ப உரிய அனுமதிகளை வழங்கத் தேவையான அறிவுறுத்தல்களை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT