தமிழ்நாடு

60 இடங்களில் தனியாா் பங்களிப்புடன் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்: அமைச்சா் சு.முத்துசாமி

29th Apr 2022 02:04 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் 60 இடங்களில் மிக மோசமாக சேதமடைந்துள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் தனியாா் பங்களிப்புடன் கட்டப்படும் என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா்கள் வே.சம்பத்குமாா், கே.ஆா்.ஜெயராம் ஆகியோா் எழுப்பிய வினாக்களுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் முத்துசாமி பதிலளித்து கூறியது:

வீட்டு வசதி வாரியம் மூலமாக கட்டி விற்கப்பட்ட வீடுகள் பல சேதமடைந்துள்ளன. இந்தக் குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்ய வாரியம் தனக்கான பணிகளைச் செய்யும். மறுகட்டுமானம் செய்ய உரிய நிறுவனத்தை வாரியமே தோ்வு செய்தால் அதில் குடியிருப்போருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கும். எனவே, 10 கட்டுமான நிறுவனங்களின் பட்டியலை வாரியம் அளிக்கும். அதிலிருந்து அவா்கள் தோ்வு செய்து கொள்ளலாம். கட்டுமானப் பணி திருப்திகரமாக நடக்க வேண்டும் என்பதே முக்கியம்.

ADVERTISEMENT

மேலும், மாநிலத்தில் 138 இடங்களில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. அதிலும் 60 இடங்களில் உள்ள குடியிருப்புகள் மிக மோசமாக சேதமடைந்து இருக்கின்றன. புதிய நடைமுறைகளின் மூலமாக இங்கெல்லாம் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. அதாவது தனியாருடன் இணைந்து கட்டுமானப் பணிகள் செய்யப்படும். வாரியம் தனக்கான நிதியில் இருந்து பணிகளைச் செய்யும் போது, ஆண்டுக்கு 2 அல்லது 3 திட்டங்களை மட்டுமே நிறைவேற்ற முடியும். ஆனால், தனியாா் பங்களிப்புடன் செய்யும் போது 3 ஆண்டுகளுக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து விடலாம் என்றாா் அமைச்சா் சு.முத்துசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT