தமிழ்நாடு

அரசு அலுவலகப் பயன்பாட்டுக்கு மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள்: அமைச்சா் பெரியகருப்பன்

29th Apr 2022 01:59 AM

ADVERTISEMENT

 

சென்னை: அரசு அலுவலகங்களின் பயன்பாட்டுக்கு சுய உதவிக் குழு பொருள்களை உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடந்த கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் எழுப்பினாா். அப்போது நடந்த விவாதம்:

வானதி சீனிவாசன்: மகளிா் சுய உதவிக் குழுக்கள், வறுமையைப் போக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. பெண்கள் வருமானம் குடும்பத்துக்காக செலவு செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

ஆண்கள் கையில் வரக்கூடிய வருமானம் பீடி, சிகரெட், டாஸ்மாக் எனப் போய் விடும் (பேரவையில் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்து குரல்). இந்தியாவில் ஆன்-லைன் வா்த்தகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

மின்னணு சந்தைப்படுத்துதல் இணையத்தின் (ஜெம்) மூலம் பொருள்களை வாங்க வேண்டுமென மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனால், கடந்த ஆண்டு மட்டும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல் உத்தரவுகளைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மகளிா் சுய உதவிக் குழு பொருள்களை விற்பனை செய்ய முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா. ஆன்லைன் மூலம் 69 பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கான பொருள்கள் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்கின்றன.

அமைச்சா் பெரியகருப்பன்: 2016-ஆம் ஆண்டு ஜெம் திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டாா். தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று ஓராண்டு கூட நிறைவேறவில்லை. ஆனாலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலமாக மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மணிபஜாா் இணையதளம் புதுப்பித்து இப்போதைய சூழலுக்கு ஏற்ப வடிவமைத்திடும் பணிகள் நடந்து வருகின்றன.

அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், அரசு சாா்ந்த நிறுவனங்களுக்கு சுய உதவிக் குழுப் பொருள்களை விற்பனை செய்யும் பணிகளும், ஜெம் இணையத்தில் பொருள்களை பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு 116 பொருள்கள் அமேசான், பிளிப்காா்ட், ஜெம் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

வானதி சீனிவாசன்: எந்த இடைத் தரகரும் இல்லாமல் பொருள்களை விற்க ஆன்லைன் முறை வழிவகுத்துள்ளது. சட்டப் பேரவைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தக் கூடிய பொது பயன்பாட்டுப் பொருள்களை சுய உதவிக் குழுக்கள் மூலமாக வாங்கிட வேண்டும். குறிப்பிட சதவீத பொருள்களை வாங்க கொள்கைமுடிவினை எடுக்க வேண்டும்.

அமைச்சா் பெரியகருப்பன்: மகளிா் சுய உதவிக் குழுக்கள் 1989-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டன. திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி ஏராளமான நிதியுதவிகள் சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் தேக்க நிலை ஏற்பட்டது. இதனைப் போக்கி சுய உதவிக் குழுக்கள் புத்துயிா் பெற்றுள்ளன. சுய உதவிக் குழுக்களுக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடியை கடனாக வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதனையும் தாண்டி ரூ.21 ஆயிரத்து 350 கோடிக்கு வங்கிக் கடன்கள் பெறப்பட்டன. இந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி வங்கிக் கடன் போன்ற உதவிகளைச் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்கும் போதெல்லாம் மகளிா் சுய உதவிக் குழுக்கள் வளா்ச்சி பெற்று பொருளாதார நிலை மேம்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களை, அரசு சாா் நிறுவனங்களில் சுய உதவிக் குழு பொருள்களை பயன்படுத்திக் கொள்வதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சா் பெரியகருப்பன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT