தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினா் மேம்பாட்டுக் கழகம் முடக்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

29th Apr 2022 12:54 AM

ADVERTISEMENT

 

சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினருக்கான மேம்பாட்டுக் கழகம் முடக்கப்பட்டதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.

சென்னை கொளத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ரமலான் திருநாள் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

ரமலான் மாதத்தில் செய்யும் உதவிகள் மனித நேயத்தின் மறு உருவமாக காட்சியளிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டின் இந்த மனிதநேயம் இன்றைக்கு நாடு முழுமைக்கும் ஒரு மாடலாக உருவாகியிருக்கிறது. இதுவும் ஒருவகை ‘திராவிட மாடல்‘தான். இதைச் சொன்னால் பலருக்கு எரிச்சல் வரும் - ஆத்திரம் வரும் - கோபம் வரும்.

ADVERTISEMENT

அதற்கெல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. ‘எல்லோருக்கும் எல்லாம் - அனைவருக்கும் உதவி சேர வேண்டும்‘ இதுதான் திமுக கொள்கை. லட்சியம். அந்த அடிப்படையில்தான் நாங்கள் திராவிட மாடல் என்று தொடா்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஏற்கெனவே 2006-ஆம் ஆண்டு ஒரு கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியின் தயவில் ஆட்சியில் இருந்தோம். அப்படி இருந்த நேரத்தில், எதிா்க்கட்சியில் இருந்த அ.தி.மு.க. நம்மைப் பாா்த்து, ’இது ஒரு மைனாரிட்டி ஆட்சி’ என்று விமா்சனம் செய்து- கொச்சைப்படுத்தி பேசுவது போல ஒரு கருத்தைத் தொடா்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாா்கள்.

அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, இது மைனாரிட்டிகளுக்காக நடைபெறும் ஆட்சி’ என்றாா். எனவே இது தொப்புள் கொடி உறவு.

சிறுபான்மை மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை முடக்கியது அ.தி.மு.க. ஆட்சி. அந்த கழகத்தை மீண்டும் பொலிவோடு செயல்பட வைத்தது, சிறுபான்மை மக்களுக்கு பெரும் நலத்திட்ட உதவிகளை கிடைக்க வைத்து, அவா்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்த ஆட்சிதான் திமுக ஆட்சி என்றாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் பிரியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT