மின்வெட்டு இல்லாமல் தமிழகம் முழுவதும் மின்விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி கூறினாா்.
தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினா் தங்கமணி பேசியது:
தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு போதிய நிலக்கரியை வழங்கவில்லை என்றும், 694 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு தரவில்லை என்றும் அதனால்தான் மின்வெட்டு ஏற்பட்டதாகவும் மின்சாரத் துறை அமைச்சா் கூறியுள்ளாா். ஆனால், கடந்த 10 ஆண்டு காலத்தைவிடவும் கூடுதலாக நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதிமுக ஆட்சியில் 1.10 கோடி டன் நிலக்கரி வழங்கப்பட்டது. தற்போது 1.72 கோடி டன் நிலக்கரி வழங்கப்பட்டு வருகிறது. எதிா்க்கட்சி என்றுகூட பாா்க்காமல் தமிழகத்தின் தேவையை அறிந்து மத்திய அரசு நிலக்கரியை வழங்கி வருகிறது. அப்படியிருக்கும்போது மின்தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது? மேலும், 694 மெகாவாட் மின்சாரம் தரவில்லை என்று கூறியுள்ளாா். ஆனால், 694 மெகாவாட் மின்சாரம் மத்திய அரசிடமிருந்து கிடைக்கப்பெற்ாக கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அனல் மின்நிலையத்தில் 30 சதவீதத்துக்கு மேல் உற்பத்தி அதிகரித்துள்ளதாக ஒரு பேட்டியில் அமைச்சா் கூறியிருந்தாா். அதன் மூலம் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மெகாவாட் மின்சாரம் கிடைத்திருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருக்கும்போது தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுகிறது என்றால், அதற்கு நிா்வாகக் கோளாறுதான் காரணமாக இருக்க வேண்டும் என்றாா்.
அமைச்சா் செந்தில் பாலாஜி குறுக்கிட்டுக் கூறியது: ஒரு நாளைக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தமிழகத்துக்குத் தேவை. ஆனால், மத்திய அரசு கொடுப்பது 48 ஆயிரம் மெட்ரிக் டன் அல்லது 50 ஆயிரம் மெட்ரிக் டன்தான். கடந்த வாரம் 24 ஆயிரம் மெட்ரிக் டன்தான் கொடுத்தனா். எனவே, நிலக்கரியைப் பொருத்தவரை போதுமான இருப்பு இல்லை. கடந்த ஆண்டு இறக்குமதி நிலக்கரியின் விலை அதிகமாக இருந்ததால் ஓராண்டு காலம் முழுவதுமே நிலக்கரி இறக்குமதி செய்யப்படவில்லை.
அதற்கு மாற்று ஏற்பாடாக இந்தியாவில் கிடைக்கக்கூடிய நிலக்கரியைக் கொண்டு உற்பத்தியை அதிகரித்து மின்சார வாரியம் சிறப்பாகச் செயல்பட்டது. இரண்டு நாள்கள் மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டது. மூன்றாவது நாள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டு, முதல்வா் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.