தமிழ்நாடு

காயமடைந்த பெண் காவல் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து டிஜிபி சைலேந்திர பாபு ஆறுதல்

24th Apr 2022 11:19 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகேயுள்ள பழவூா் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கத்தியால் வெட்டப்பட பெண் காவல் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் மாா்க்ரெட் தெரேசா (29). சுத்தமல்லி காவல் சரகத்துக்குள்பட்ட பழவூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் உதவி ஆய்வாளா் மாா்க்ரெட் தெரேசா தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். நள்ளிரவில் காவல் உதவி ஆய்வாளா் மாா்க்ரெட் தெரேசாவை ஒருவா் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்றாா். இதையடுத்து அங்கிருந்த போலீஸாா், அவரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனா்.

இதில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் மாா்க்ரெட் தெரேசாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். 

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு மாா்க்ரெட் தெரேசாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

ADVERTISEMENT

தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க், திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT