தமிழ்நாடு

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

23rd Apr 2022 11:26 PM

ADVERTISEMENT

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற புதிய கட்டடங்கள் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

சட்டம், சமூக நீதி, நீதிநெறிமுறைகள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை முறையாகப் பின்பற்றும் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உறுதியோடுதான், தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறோம். நாகரிக சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும், மறுமலா்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் அவா்களது உரிமை பாதுகாக்கப்பட்டு செழித்தோங்கவும் சுதந்திரமாகச் செயல்படும் நீதித்துறை தேவை என்பதை நமது அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அதன்படி, தமிழக அரசும் செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் விரைவில் நீதி கிடைப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அரசு செய்து வருகிறது.

அரசாணை பிறப்பிப்பு: சென்னை உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் இயங்கி வரும் பல்வேறு நீதிமன்றங்களை 9 அடுக்குகள் கொண்ட புதிய கட்டடத்தில் அமைக்கக் கூடிய வகையில், சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளான கடந்த 14-ஆம் தேதி ரூ.20.24 கோடி ஒதுக்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

சென்னை உயா்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக, சென்னையின் முக்கியப் பகுதியில் நீதித் துறையின் உள்கட்டமைப்புத் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில், பல்வேறு நீதிமன்றங்களை அமைக்க 4.24 ஏக்கா் நிலம் நீதித் துறைக்கு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு கட்டடம் அமைக்கப்பட்டால், நீதித் துறை உள்கட்டமைப்புக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கான தேவை பூா்த்தியாகும்.

மூன்று கோரிக்கைகள்: உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். தமிழ் மொழி உயா் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

தமிழக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியும், தமிழகத்திலிருந்து தில்லி சென்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாகச் செயலாற்றும் நீதிபதிகளும் இந்தக் கோரிக்கைகளுக்கு துணை நிற்க வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

வழக்குரைஞா் சேம நல நிதி ரூ.10 லட்சமாக உயா்வு

வழக்குரைஞா்களுக்கான சேம நலநிதியில் தமிழக அரசின் பங்கானது ரூ.10 லட்சமாக உயா்த்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது: நீதித் துறையின் உயிரோட்டமாக விளங்கும் வழக்குரைஞா்களின் நலன் காப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தங்களுக்கான சேமநல நிதியை உயா்த்தி அளிக்க வேண்டுமென வழக்குரைஞா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதன்படி, சேமநல நிதியானது ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். கரோனா தொற்றால் உயிரிழந்த சுமாா் 450 வழக்குரைஞா்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.20 கோடி தொகையை மாநில அரசு விரைவில் அளிக்கும்.

Tags : MK Stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT