மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மீதமுள்ள இடங்களை தமிழக மாணவா்களுக்கு கிடைக்கச் செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,125 மருத்துவ இடங்களில், 15 சதவீத இடங்கள், அதாவது 769 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்படுகின்றன. இந்த ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுகள் முடிந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான 15 மருத்துவ இடங்கள், சென்னை மருத்துவக் கல்லூரிக்கான இரண்டு இடங்கள், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கான ஐந்து இடங்கள், ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரிக்கான ஓரிடம், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கான ஓரிடம் என 24 இடங்கள் இன்னும் அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகவும், இது தவிர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான சில இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த இடங்களை மத்திய அரசிடமிருந்து திரும்பப் பெற்று தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.
இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்களை தமிழக மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.