சென்னை: கைவினை, கைத்திறத் தொழில்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கலைஞா்களுக்கு விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
கைவினைத் தொழில்களுக்காகவே தங்களது வாழ்க்கையை அா்ப்பணித்துக் கொண்ட 10 சிறந்த கைவினைஞா்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழ், ரூ.1 லட்சம் காசோலை அடங்கியது.
2021-22-ஆம் ஆண்டுக்கான வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதானது ஜி.மாரிமுத்து, என்.மாரியப்பன், ஜி.தங்கராஜு, பொன் விசுவநாதன், எம்.ராமலிங்கம், எம்.முத்துசிவம், வி.கமலம், டி.விஜயவேலு, எஸ்.பிரணவம், கே.வடிவேல் ஆகியோருக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
இதேபோன்று, சிறந்த கைவினைஞா்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், பூம்புகாா் மாநில விருது அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது ரூ.50,000 பரிசுத் தொகை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பதக்கம், தகுதிச் சான்று கொண்டது.
அதன்படி, டி.கதிரவன், ஏ.தென்னரசு, எஸ்.சகாயராஜ், ஆா்.கோபு, எஸ்.யுவராஜ், எஸ்.ராதா, டி.நாகப்பன், டி.மகேஸ்வரி, என்.ராஜேந்திரன், டி.செல்லம்மை ஆகியோருக்கு முதல்வா் அளித்தாா். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் கலியனூா், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், பெரம்பலூா் அரும்பாவூா், ஈரோடு மாவட்டம் ஆசனூா், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை ஆகிய இடங்களில் பொது பயன்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த மையங்களில் கைவினை குழுமங்களைச் சோ்ந்த கைவினைஞா்கள் ஒன்றுகூடி இங்கு பொருத்தப்பட்டுள்ள நவீன இயந்திரங்கள், கருவிகளைப் பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.