சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி
அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) மறுகட்டமைப்புக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்டன. தொடா்ந்து ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து மறுகட்டமைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி எஸ்எம்சி உறுப்பினா்கள் தோ்வு செய்வது தொடா்பான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியுள்ளவாறு அரசு நடுநிலைப்பள்ளிகளில் எஸ்எம்சி உறுப்பினா்கள் தோ்வு ஏப்ரல் 23-ஆம் தேதி நடத்தப்பட வேண்டும். அதேபோல், தொடக்கப் பள்ளிகளில் ஏப்ரல் 30, மே 7-ஆம் தேதி என இரு கட்டங்களாக உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுவா். மேலும், உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஜூன் 4-ஆவது வாரம் உறுப்பினா்கள் தோ்வு நடைபெறும்.
இந்த காலஅட்டவணையின்படி உரிய வழிமுறைகளை பின்பற்றி எஸ்எம்சி உறுப்பினா்கள் தோ்வை சிறந்தமுறையில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காதவண்ணம் நடத்தி முடிக்க வேண்டும். இதுசாா்ந்து அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.