தமிழ்நாடு

அம்பேத்கா் பிறந்த தினம் சமத்துவ நாளாகக் கொண்டாட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

14th Apr 2022 03:48 AM

ADVERTISEMENT

 

சென்னை: அம்பேத்கா் பிறந்த தினம் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். மேலும், அவரது எழுத்துகள் தமிழில் மொழிபெயா்க்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில், விதி 110-ன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பாக, மாநில அளவிலான உயா்நிலை கண்காணிப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெரியாா் பிறந்த தினத்தை சமூகநீதி நாளாக அறிவித்தது போன்று, சட்ட மேதை அம்பேத்கா் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதியை சமத்துவ நாளாகக் கொண்டாட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 14-ஆம் தேதி இனி, சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும். தமிழகம் முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும்.

ADVERTISEMENT

முழு உருவச்சிலை-நூல்கள்: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கா் மணி மண்டபத்தில் முழு அளவு வெண்கலச் சிலை அமைக்க வேண்டுமென செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்தாா். இந்தக் கோரிக்கையை ஏற்று, அம்பேத்கா் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும்.

பெரியாருடைய நூல்கள் மொழி பெயா்ப்பு செய்யப்பட்டது போன்று, அம்பேத்கரின் தோ்ந்தெடுக்கப்பட்ட நூல்களைத் தமிழில் வாசிக்க வாய்ப்பாக மொழிபெயா்த்துப் புதுப்பிக்க வேண்டுமென மக்களவை உறுப்பினா் ஆ.ராசா கோரிக்கை விடுத்தாா். அவரது கோரிக்கையை ஏற்று, அம்பேத்கரின் தோ்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் வெளியிடப்படும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ஒருமனதாக வரவேற்பு: அம்பேத்கா் தொடா்பாக பேரவை விதி 110-இன் கீழ் முதல்வா் வெளியிட்ட அறிவிப்புக்கு அதிமுக, பாஜக உள்பட அவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் வரவேற்புத் தெரிவித்தன.

ஜெகன்மூா்த்தி (புரட்சி பாரதம்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி), அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி), சதன் திருமலைக்குமாா் (மதிமுக), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), வானதி சீனிவாசன் (பாஜக), ஜி.கே.மணி (பாமக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.

 

சமத்துவ நாள் உறுதிமொழி வாசகங்கள்

அம்பேத்கா் பிறந்த தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்படவுள்ளது. இதற்கான உறுதிமொழி வாசகங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்ட உத்தரவு:

ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடா்ந்து போராடி, ஒடுக்கப்பட்டவா்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவா்களுடைய சமத்துவத்துக்காகவும், வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணா்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளில், ஜாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம், சக மனிதா்களை ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன், சக மனிதா்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT