எடப்பாடி: எடப்பாடி அருகே நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்த மர்ம கும்பல் அங்குள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட காட்டூர். இப்பகுதியை சேர்ந்த முனியப்பன் லாரி ஓட்டுநர், இவரது மனைவி கலைச்செல்வி (35) இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் இவர்கள் காட்டூர் பகுதியில், எடப்பாடி- மேட்டூர் பிரதான சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இதையும் படிக்க.. கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனை
முனியப்பன் வட மாநிலத்திற்கு லாரி ஓட்டி சென்றுள்ள நிலையில், அவரது மனைவி கலைச்செல்வி கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கலைச்செல்வி நேற்றிரவு அவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த 35 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணம் ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கலைச்செல்வி பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் அங்கு தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதேபோல் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பில்லுக்குறிச்சி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் இவரது மனைவி ஜோதி இவர்களது வீடு எடப்பாடி-மேட்டூர் பிரதான சாலையை அருகாமையில் அமைந்துள்ளது. நேற்று இரவு வீட்டின் முற்றத்தில் ஜோதி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டினுள் நுழைந்த 3 மர்ம நபர்கள் ஜோதியின் வாயைப் பொத்தி அவர் அணிந்திருந்த 13 சவரன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூலாம்பட்டி பேரூராட்சியில் அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.