தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மன்னார்குடியில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

12th Apr 2022 11:51 AM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் ஏஐடியூசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடி மேல ராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மன்னார்குடி ஆட்டோ தொழிலாளர் சங்க நகரச் செயலர் எஸ்.எஸ். சரவணன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் எஸ்.பாஸ்கர்,நகர சிறப்பு தலைவர் ஏ.முத்துவேலன், நகர பொருளாளர் பி.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகள்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு கடுமையாக உயர்ந்துள்ளது. அதற்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தைத் திருத்தம் செய்து உயர்த்த வேண்டும். கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு குடும்ப நிவாரணமாக மாதம் ரூ.7500 வழங்க வேண்டும்.  ஓலா, ஊபர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களைத் தடை செய்துவிட்டு அரசின் சார்பில் ஆட்டோ ஆப் ஏற்படுத்தி ஆட்டோ தொழிலாளர்களுக்கு உதவிட வேண்டும். 

ADVERTISEMENT

வீடில்லா ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு வழங்க வேண்டும். எப்.சி.காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ 10,000 நிதி உதவி வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர் நல வாரியத்தை சீரமைப்பு என்ற பெயரில் குளறுபடி செய்யக்கூடாது. நலவாரிய புதுப்பித்தலுக்கு ஆன்லைன் மூலம் செய்யப்படுவதை எளிமைப்படுத்தி அட்டை வழங்குவதை விரைவுபடுத்த வேண்டும். மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி, ஆட்டோ தொழிலாளர் சங்கம்  மாவட்ட துணைச் செயலாளர் வீ.கலைச்செல்வன், பிஎஸ்என்எல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் கிள்ளி வளவன் ஆகியோர் பேசினர். இதில், ஏஐடியுசி நகர தலைவர் என் தனிக்கொடி, ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் டி.பால்பாண்டி , என்.நாகேந்தின், எம்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT