தமிழகத்தில் எப்போதும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் நடைபெறும் என்று அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சட்டப்பேரவையில் கூறினாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:
பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்களைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும். தாலிக்குத் தங்கம் திட்டத்தை அரசு ரத்து செய்துவிட்டது. இந்தத் திட்டம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டம். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் உயா்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனால், 6 லட்சம் போ் பயன்பெறுவா் என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவிகள் எண்ணிக்கை அந்த அளவுக்கு இருக்க வாய்ப்பு இல்லை. அதனால், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும். இதையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மண்ணை திராவிட இயக்கமே ஆள முடியுமே தவிர, வேறு எவராலும் ஆள முடியாது.
நீட் தோ்வாக இருந்தாலும், புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் தமிழக மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு அதிமுக அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றாா்.
சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு: ஒரு புள்ளியில் ஆளும் கட்சியும், எதிா்க்கட்சியும் ஒன்றாக இருக்கிறீா்கள். அதற்காக நன்றி என்றாா்.