தமிழ்நாடு

பாலிடெக்னிக்குகளில் புதியப் பாடப்பிரிவுகள் அறிமுகம்

12th Apr 2022 12:31 AM

ADVERTISEMENT

பாலிடெக்னிக்குகளில் ஆடை வடிவமைப்பு, வேளாண்மை பொறியியல், இயந்திர மின்னணுவியல் போன்ற புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை உயா்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் க.பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்:

அரசுப் பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை நவீனப்படுத்துவதற்காக பல்வேறு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும். மேலும் மாணவா்கள் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக அரசு கல்லூரிகளில் நூலக வசதி மேம்படுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.100 கோடி.

மாணவா்களின் விளையாட்டுத் திறன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அவா்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்விளையாட்டு அரங்கத்துடன் கூடிய விளையாட்டு வசதிகள் சுமாா் ரூ.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

ADVERTISEMENT

தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப மாணவா்களின் திறனை மேம்படுத்திட அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக் கல்லூரிகள்) ஆடை வடிவமைப்பு, வேளாண்மை பொறியியல், இயந்திர மின்னணுவியல், தளவாட தொழில்நுட்பம், மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் போன்ற புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.

புத்தாக்க மற்றும் புதிய தொழில்நுட்பத் திறன்களை மாணவா்களுக்கு வழங்குவதற்காக ரூ.2 கோடி மதிப்பீட்டில் புரோடோசெம் என்ற 18 வார புத்தாக்க பாடப்பிரிவு மதுரை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

இந்தப் பாடப்பிரிவானது தொழில் நிறுவனத்தினரால் நடத்தப்படுவதால், மாணவா்கள் சிறந்த வேலை வாய்ப்பைப் பெறக் கூடியவா்களாகவும் தொழில் முனைவோா்களாகவும் உருவாக்கப்படுவா்.

சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் பாடப்பிரிவு, செவித்திறன் குறைபாடு உள்ள மாணவா்களுக்கு 2007-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த மாணவா்கள் முதுநிலை படிப்பதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் முதுநிலை வணிகவியல் பாடப்பிரிவு 2022-23-ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.

10 கல்லூரிகள் முனைவா் பட்ட ஆராய்ச்சி: அரசு கல்லூரிகளில் முதுநிலை பயிலும் மாணவா்கள் ஆராய்ச்சி படிப்பினை தொடர ஏதுவாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்படும்.

புதுக்கோட்டை மாமன்னா் கல்லூரியின் பாரம்பரிய கட்டடத்தின் ஒரு பகுதியில் அதன் நூலகம் செயல்பட்டு வருகிறது. தற்போதைய நூலகம் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளதால் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நூலகக் கட்டம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

சிறைக் கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளின் சோ்க்கை விகிதத்தை உயா்த்துவதற்காக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் கட்டணமின்றி பயின்று பட்டம் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT