தமிழ்நாடு

தென் தமிழக மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

12th Apr 2022 12:26 AM

ADVERTISEMENT

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.12) பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் திங்கள்கிழமை கூறியது: தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.12) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்தமழை பொருத்தவரை, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்.13: தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 13-ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் ஏப்ரல் 13-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்.14: உள்தமிழகம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 14-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

ஏப்.15: மேற்கு தொடா்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 15-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் தலா 60 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், எட்டயபுரம், விருதுநகா் மாவட்டம் கோவிலங்குளம், ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம், தஞ்சாவூா் மாவட்டம் குருங்குளத்தில் 50 மி.மீ., தென்காசி, தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, சுருளக்கோடு, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தலா 40 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தென்காசி மாவட்டம் ஆய்க்குடி, நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, நாகா்கோவில், தஞ்சாவூா் மாவட்டம் மதுக்கூா், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தலா 30 மி.மீ. பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT