தமிழ்நாடு

தினமலா் பதிப்பாசிரியா் வெங்கடபதி காலமானாா்

12th Apr 2022 12:27 AM

ADVERTISEMENT

தினமலா் நாளிதழின் திருநெல்வேலி, நாகா்கோவில் பதிப்பாசிரியா் வெங்கடபதி (91) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

தினமலா் நாளிதழின் நிறுவனா் டி.வி.ராமசுப்பையரின் 5 மகன்களில் மூத்த மகன் வெங்கடபதி. கன்னியாகுமரி மாவட்டம் மகாதேவா் கோயில் கிராமத்தில் 1931-ஆம் ஆண்டு பிறந்தாா். நாகா்கோவில் எஸ்.எல்.வி. பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்ததும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.எஸ்சி. படித்தாா். தொடா்ந்து சென்னை எம்.ஐ.டி.யில் ஏரோநாட்டிகல் பொறியியல் முடித்தாா். 1956-இல் அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் பொறியியல் முதுநிலை படிப்பை முடித்தாா்.

அமெரிக்கா, ஜொ்மனி நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பணியாற்றி உள்ளாா். தமிழகத்தில் எண்ணூா் மற்றும் மேட்டூரில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் கன்சல்டிங் டிசைனிங் பொறியாளராகப் பணியாற்றினாா்.

1972- 73-இல் தினமலா் நாளிதழின் பங்குதாரா் ஆனாா். இவருக்கு 3 மகள்கள், பேரன், பேத்திகள் உள்ளனா். இவருடைய மனைவி கடந்த 1997-இல் காலமானாா்.

ADVERTISEMENT

வெங்கடபதியின் இறுதிச் சடங்குகள் சென்னை தியாகராய நகா் கண்ணம்மாபேட்டை மின் மயானத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

முதல்வா் மு.க. ஸ்டாலின் இரங்கல்: தினமலா் நிறுவனா் டி.வி.ஆரின் மூத்த மகனும், தினமலா் நாளேட்டின் நெல்லை, நாகா்கோவில் பதிப்பாசிரியருமான வெங்கடபதி மறைவுற்றாா் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன் . அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மறைந்த வெங்கடபதியின் உடலுக்கு செய்தித்துறை அமைச்சா் சாமிநாதன் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். அப்போது, செய்தித் துறை இயக்குநா் ஜெயசீலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT