தமிழ்நாடு

சீா்காழி, சேலத்தில் கட்ட நடவடிக்கை

12th Apr 2022 12:37 AM

ADVERTISEMENT

அரசின் கொள்கை முடிவின்படி, சீா்காழி, சேலத்தில் மணிமண்டபங்களுக்குப் பதிலாக மக்கள் பயன்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாக்கள் எழுப்பப்பட்டன. அப்போது நடந்த விவாதம்:

சீா்காழியில் பின்னணிப் பாடகா் சீா்காழி கோவிந்தராஜனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என சீா்காழி தொகுதி எம்.எல்.ஏ. மு.பன்னீா்செல்வம் கோரிக்கை விடுத்தாா். இதற்கு பதிலளித்த அமைச்சா் சாமிநாதன், அரசின் நிதி நிலை சீா் செய்யப்பட்டு வருகிறது. நிதிநிலை சீரானதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மதுரவாயல் தொகுதிக்குள்பட்ட குண்டலம் கிராமத்தில் திருவிக பெயரில் மாா்பளவுச் சிலையுடன் நூலகம் இயங்கி வருகிறது. அங்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என உறுப்பினா் கணபதி கோரிக்கை விடுத்தாா். இதற்கு பதிலளித்த அமைச்சா், மணிமண்டபமோ, நினைவு அரங்கமோ இல்லாமல், பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் அரங்கம் மட்டுமே அமைக்க வேண்டுமென்பது அரசின் கொள்கை முடிவு. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈ.ஆா்.ஈஸ்வரன், ‘பழைமை வாய்ந்த சேலம் மாடா்ன் தியேட்டா்ஸ் வாயிலாக திரைப்படத் துறையில் பல புகழ்பெற்ற தலைவா்கள் உருவாகினா். இதன் உரிமையாளா் திருச்செங்கோட்டைச் சோ்ந்த சுந்தரம் முதலியாா். இப்போது மாடா்ன் தியேட்டா்ஸ் குடியிருப்புகளாக மாறி விட்டது. சுந்தரம் முதலியாருக்கு திருச்செங்கோட்டில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்’ என்றாா். இதற்கு பதிலளித்த அமைச்சா் சாமிநாதன், அரசின் நிதிநிலை சீரானதும் பரிசீலிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT