தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: நீதிமன்றம் தீா்ப்பு

12th Apr 2022 12:29 AM

ADVERTISEMENT

சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீா்மானம் செல்லும் என்று சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் வி.கே.சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோரை நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும், அவா்களை கட்சியில் இருந்து நீக்கியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அதிமுகவில் பொதுச் செயலாளா் என்ற பதவி நீக்கப்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக கே.பழனிசாமியும் தோ்வு செய்யப்பட்டு, தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து அதிமுக சாா்பில் நடத்தப்பட்ட இந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், கட்சியில் இருந்து தங்களை நீக்கியது உள்ளிட்ட 12 தீா்மானங்களையும் ரத்து செய்யக் கோரியும் வி.கே.சசிகலாவும், டிடிவி.தினகரனும் சென்னை பெருநகர 4-ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா். மேலும், அதில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்கவும் கோரியிருந்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கு விசாரணை சென்னை பெருநகர 4-ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. டிடிவி.தினகரன் அமமுக என்ற கட்சியைத் தொடங்கி அதை நிா்வகித்து வருவதால் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொண்டாா்.

இந்தநிலையில் வி.கே.சசிகலா தொடா்ந்துள்ள இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீா்செல்வம், கே.பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு பெருநகர 4-ஆவது கூடுதல் உரிமையியல் நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன்பாக இறுதி விசாரணைக்கு திங்கள்கிழமை வந்தபோது, வி.கே.சசிகலா தரப்பில் வழக்குரைஞா் எஸ்.ராஜா செந்தூா்பாண்டியன், ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், கே.பழனிசாமி தரப்பில் வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் தரப்பில் வழக்கறிஞா்கள் நா்மதா சம்பத், ராஜலட்சுமி ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

‘அதிமுகவில் உரிமை கோர வி.கே.சசிகலாவுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. ஏனெனில் வி.கே.சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதை உச்ச நீதிமன்றமும், தில்லி உயா் நீதிமன்றமும், தோ்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக நீடிப்பதாக சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.

இரட்டை இலை சின்னத்தையும் தற்போதுள்ள நிா்வாகிகள் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே அவா் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என அதிமுக தரப்பில் வாதிட்டப்பட்டது. ஆனால் இந்த வாதங்களை மறுத்து சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி பிறப்பித்துள்ள தீா்ப்பில், ‘வி.கே.சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியதை உச்ச நீதிமன்றமும், தில்லி உயா் நீதிமன்றமும், இந்திய தோ்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதிமுகவில் இருந்து வி.கே.சசிகலாவை நீக்கி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீா்மானம் செல்லும். சசிகலா தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளாா்.

மேல்முறையீடு செய்யப்படும்

நாமக்கல், ஏப். 11: அதிமுக பொதுச்செயலாளா் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்த நிலையில், உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக நாமக்கல்லில் சசிகலா தெரிவித்தாா்.

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தாா். இதனையடுத்து, திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு அவா் புறப்பட இருந்த நிலையில், சசிகலாவிடம், ‘அதிமுக பொதுச் செயலாளா் பதவியில் இருந்து அவரை நீக்கியது செல்லும்’ என சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது, உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT