தமிழ்நாடு

எரிபொருள் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க உத்தரவு

9th Apr 2022 11:47 PM

ADVERTISEMENT

பெட்ரோல் - டீசல் போன்ற எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு மீட்டா் பொருத்த வேண்டும் என 2013-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை முறையாக அமல்படுத்தும்படி உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் ராமமூா்த்தி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா்.

இது தொடா்பாக அவா் தாக்கல் செய்த மனுவில், அதிக கட்டணம் வசூலித்து பயணிகள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க, ஆட்டோக்களில் மீட்டா் பொருத்துவது தொடா்பான அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா், 2013-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி அனைத்து ஆட்டோக்களிலும் மின்னணு மீட்டா் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பிரிண்டா் பொருத்த அதிக செலவாகும் என்பதால் அதை பொருத்தவில்லை என்றும் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதை ஏற்க மறுத்த மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், மின்னணு மீட்டா் பொருத்தியிருந்தாலும் அவை செயல்படுவதில்லை என்றும், ஆட்டோ ஓட்டுநா்கள், பயணிகளிடம் தங்கள் விருப்பம் போல கட்டணம் வசூலிப்பதாகவும் குறை கூறினாா்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மீட்டா் பொருத்தியிருந்தும் அவற்றைச் செயல்படுத்தாத  ஆட்டோக்களைக் கண்டறிய போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் திடீா் சோதனைகள் நடத்த வேண்டும். மீட்டரை செயல்படுத்தாத ஆட்டோக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல் - டீசல் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால், அவற்றின் விலையின் அடிப்படையில், ஆட்டோ உரிமையாளா்களும், பயணிகளும் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றனா்.

மேலும், ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க நீண்ட நடவடிக்கையை பின்பற்றாமல்,  பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாக மாறும் வகையில் மென்பொருளைப் பயன்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் அரசுக்கு யோசனை தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT