தமிழ்நாடு

வேலூர் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து: ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்

9th Apr 2022 12:39 PM

ADVERTISEMENT

 

வேலூர் கொணவட்டம் பகுதியிலுள்ள பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.15 லட்சம் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தையொட்டி அப்பகுதி முழுவதும் நச்சுப் புகை பரவியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் முனீர். இவர் வேலூர் மாவட்டம் கொணவட்டம் பொன்னியம்மன் கோயில் தெருவில் ரபீக் அகமது என்பவருக்கு சொந்தமான இடத்தில் பழைய பிளாஸ்டிக் கிடங்கு நடத்தி வருகிறார். இந்த கிடங்கில் பழைய பிளாஸ்டிக் கழிவுகளை அரைத்து பொடியாக்கி அதனை ஏற்றுமதி செய்து வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அரவை செய்வதற்காக ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிளாஸ்டிக் கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகள் மீது பற்றிய தீ வேகமாக பரவியதுடன், புகை மண்டலமாக காணப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதால் தீயைக் கட்டுப்படுத்த முடியாத ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, காட்பாடியிலிருந்து கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. அதன்படி, காலை 8 மணி வரை சுமார் 6 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், இயந்திரங்கள் உள்பட சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கிடங்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். எனினும், தீ விபத்துக்கான காரணம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழைய பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தையொட்டி அப்பகுதி முழுவதும் நச்சுப்புகை பரவியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT