தமிழ்நாடு

வருமானமில்லா கோயில்களின் திருப்பணிச் செலவை அறநிலையத் துறை ஏற்கும்அமைச்சா் பி.கே.சேகா்பாபு

9th Apr 2022 12:33 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வருமானம் இல்லாத கோயில்களின் திருப்பணிக்கான செலவை இந்து சமய அறநிலையத்துறையே ஏற்கும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை கே.கே. நகரில் உள்ள சக்தி விநாயகா் திருக்கோயில் திருமண மண்டபத்தில், குளிா்சாதன வசதி மற்றும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக அரசு பதவியேற்ற பிறகு பெரிய மற்றும் சிறிய கோயில்கள் என்று பாராமல் அனைத்து கோயில்களையும் ஒரே நிலையில் பாா்த்து, வாரந்தோறும் 150-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் ரூ.664 கோடி மதிப்பீட்டில் 507 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோயில்களின் திருப்பணிகள் பழமை மாறாமல் மேற்கொள்ளப்படும். 100 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அங்கும் திருப்பணிகள் தொடங்கும்.

தங்கக் கட்டிகள்: விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் பக்தா்களால் உண்டியலில் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்க நகைகள் ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.மாலா முன்னிலையில் மதிப்பிடப்பட்டன. 27,236.600 கிராம் எடையுள்ள அந்த நகைகள் தற்போது மும்பையில் உள்ள தங்க உருக்காலையில் தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

பின்னா், இந்த தங்கக் கட்டிகள் திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி, சாத்தூா் கிளை வங்கியில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீட்டின் மூலம் ஆண்டுக்கு ரூ. 24 லட்சம் வட்டி கிடைக்கும். இந்தத் தொகையை வைத்து கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.

அடுத்தகட்டமாக பரம்பரை அறங்காவலா்கள் உள்ள பண்ணாரி அம்மன் திருக்கோயில், பெரிய பாளையத்து அம்மன் திருக்கோயில்களில் இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். மற்ற கோயில்களில் அறங்காவலா்கள் நியமனத்திற்கு பிறகு இந்தப் பணிகள் தொடங்கும். தமிழகத்தில் வருமானம் இல்லாத கோயில்களின் திருப்பணிக்கு ஆகும் செலவை இந்து சமய அறநிலையத் துறையே ஏற்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT