தமிழ்நாடு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் வைபவத்தின்போது கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் பொங்கல் வைத்தும் வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை தரிசனம் செய்தனர். 

அக்கினிச் சட்டி எடுத்து கோயிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தர்
அக்கினிச் சட்டி எடுத்து கோயிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தர்

தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தம் பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பொங்கல் வைபவத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கார், வேன், லாரி, ஆட்டோ, சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்களில் வந்து தாயமங்கலத்தில் குவிந்தனர். 

கோயிலுக்குள் முத்துமாரி அம்மனை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

இவர்கள் முடிகாணிக்கை செலுத்தியும் கிடாவெட்டி பொங்கல் வைத்தும் தீச்சட்டி அக்னிச்சட்டி ஏந்தியும் குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும் மாவிளக்கு பூஜை நடத்தியும் வேண்டுதலை நிறைவேற்றி முத்துமாரி அம்மனை தரிசனம் செய்தனர். கோயில் உள்பிரகாரத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்தனர். பொங்கல் வைபவத்தை முன்னிட்டு உற்சவர் முத்துமாரியம்மன் மூலவர் சன்னதியில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 

மானாமதுரை வைகை ஆற்றுக்குள் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ள திசையை நோக்கி கோழி, சேவல்களை  பலி கொடுத்து பொங்கல் வைத்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்

மானாமதுரை, இளையான்குடி, பரமக்குடி, திருப்புவனம் உள்ளிட்ட பல பகுதிகளில் பக்தர்கள் கண்மாய், குளங்கள்  வைகை ஆறு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ள திசையை நோக்கி கிடா வெட்டியும்  கோழி, சேவல்களை பலி கொடுத்தும் பொங்கல் வைத்து படைத்து வேண்டுதலை நிறைவேற்றி அதன் பின்னர் தாயமங்கலத்தில் சென்று முத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை, மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல முக்கிய ஊர்களிலிருந்து தாயமங்கலத்துக்கு இரவு பகலாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் மு. வெங்கடேசன் செட்டியார் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT