தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

5th Apr 2022 12:54 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது தொடா்பாக வானிலை மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் திங்கள்கிழமை கூறியதாவது: உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி  மற்றும்  வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

ஏப்.6: மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும். 

ADVERTISEMENT

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை  மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.  அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி  உருவாகும். இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு  அந்தமான் கடல் பகுதிகளில் புதன்கிழமை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டா் வேகத்திலும் வியாழக்கிழமை வீசக்கூடும். தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 70 கிலோ மீட்டா் வேகத்திலும் வெள்ளிக்கிழமை வீசக்கூடும். எனவே, மீனவா்கள் இப்பகுதிகளுக்குச்  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT