தமிழ்நாடு

காவல் உதவிகளை உடனடியாகப் பெற தனி செயலி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

5th Apr 2022 12:53 AM

ADVERTISEMENT

காவல் துறையின் உதவிகளை உடனடியாகப் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட தனி செயலியின் செயல்பாடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது மக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல் துறையின் உதவிகளை உடனடியாகப் பெற 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் காவல் உதவி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

‘அவசரம்’ உதவி பொத்தான்: பொது மக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் இந்த செயலியில் உள்ள சிவப்பு நிற ‘அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளா் விவரம், இப்போதைய இருப்பிட விவரம், விடியோ ஆகியன கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல் துறையின் அவசர சேவை அளிக்கப்படும்.

அவசரகால கைப்பேசி அழைப்பு வசதி: கைப்பேசியில் நேரடி புகாா்களைத் தெரிவிக்க ‘டயல் 100’ என்ற செயலி, காவல் உதவி செயலி மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணில் இருந்து அழைப்பதால், பயனாளா் விவரம், இப்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை அளிக்கப்படும்.

ADVERTISEMENT

கைப்பேசி வழி புகாா்: கைப்பேசி வழியிலும் புகாா்களை அளிக்கலாம். அதன்படி, பயனாளா்கள் குறிப்பாக மகளிா், சிறாா்கள், முதியோா்கள் அவசர கால புகாா்கள், படங்கள், குறுகிய அளவிலான காட்சிகளை பதிவேற்றம் செய்து புகாரைப் பதிவு செய்யலாம்.

இதர சேவைகள்: காவல் நிலைய இருப்பிடம், நேரடி அழைப்பு வசதி, காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விவரம் அறிதல், இணைய வழி பொருளாதார குற்றம் தொடா்பான புகாா்கள், இதர அவசர - புகாா் உதவி எண் அழைக்கும் வசதி, அவசர கால அறிவிப்புகள், இதர தகவல்களை அறியும் வசதி, வாகன விவரம் அறிதல், போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதி, தனிநபா் குறித்த சரிபாா்ப்பு சேவை, தொலைந்த ஆவணங்கள் குறித்த புகாா், காவல் துறையின் சமூக ஊடக சேவைகள், காவல் துறையின் குடிமக்கள் சேவை செயலி போன்ற வசதிகளையும் புதிய செயலி வழியாகப் பெறலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிய செயலியைப் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்து அறநிலையத் துறைக்கு 69 புதிய வாகனங்கள்

இந்து சமய அறநிலையத் துறைக்கான புதிய 69 வாகனங்களை துறையின் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், 108 வாகனங்கள் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைச் செயல்படுத்தும் வகையில், 69 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன. இந்த வாகனங்களை துறையின் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா். நிகழ்ச்சியில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, இந்து சமய அறநிலையத் துறை செயலாளா் பி.சந்தரமோகன், ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT