தமிழ்நாடு

கரோனா ஒப்பந்த செவிலியா்களுக்கு மாற்றுப் பணி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி

5th Apr 2022 12:49 AM

ADVERTISEMENT

கரோனா ஒப்பந்த செவிலியா்கள் 800 பேருக்கு மாற்றுப் பணி கண்டிப்பாக வழங்கப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்தாா். 

 சென்னை, திருவான்மியூரில் உள்ள இந்திய மருத்துவா்கள் கூட்டுறவு மருந்து செய் நிறுவனம், பண்டகசாலையின் (இம்ப்காப்ஸ்) 75-ஆவது ஆண்டு பவள விழாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்து, புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தாா்.

விழாவில் அவா் பேசியதாவது:   சித்தா, ஆயுா்வேதா மற்றும் யுனானி போன்ற இந்திய மருத்துவ முறைகளில் சுமாா் 1,000 வகையான மருந்துகளை உற்பத்தி செய்யும் கூட்டுறவு நிறுவனம் உலகிலேயே இம்ப்காப்ஸ் நிறுவனமாகத்தான் இருக்க முடியும். இம்ப்காப்ஸ் நிறுவனத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிதாக தொழிற்சாலை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களில் மருந்துகள் பகுப்பாய்வுக் கூடமும், ஆராய்ச்சிக் கூடமும் அமையவுள்ளன. டெங்கு, கரோனா தொற்றுக் காலங்களில் இம்ப்காப்ஸ் நிறுவனம் நிலவேம்பு குடிநீா், கபசுரக்குடிநீா் போன்ற சித்த மருந்துகளை தயாரித்து மக்களை பெருந்தொற்றிலிருந்து காப்பாற்றியது என்றாா். 

செவிலியா்களுக்கு மாற்றுப் பணி:  தொடா்ந்து, அமைச்சா்  மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘மருத்துவ தோ்வாணையம் (எம்ஆா்பி) மூலம் கரோனா காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியா்களில் 75 சதவீதத்தினருக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டுள்ளது. 800 செவிலியா்களுக்கு மட்டும் தற்போதைய சூழலில் பணி வழங்க முடியாத நிலை உள்ளது. அவா்களுக்கு கண்டிப்பாக மாற்றுப் பணி வழங்கப்படும். இந்த தகவல் அவா்களிடம் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், சிலரின் தூண்டுதலால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

முகக் கவசம் அணிதல் அவசியம்: கரோனா காலத்தில் பணியாற்றியவா்களுக்கு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். பொது இடங்களில் தடுப்பூசி கட்டாயம் என்ற கட்டுப்பாடு மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது. பொது மக்கள் முகக் கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசின் மற்ற பிற வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள்  இன்னும் இரண்டு மாதங்களுக்கு முகக் கவசம் அணிய வேண்டும். இருப்பினும் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என்றாா் அவா்.

விழாவில் கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஜவஹா், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா் எஸ்.கணேஷ், இம்ப்காப்ஸ் தலைவா் ஆா்.கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT