தமிழ்நாடு

தொழில் திறன் மிக்க மனித வளமாக மேம்படுத்த நடவடிக்கை

4th Apr 2022 04:24 AM

ADVERTISEMENT

தமிழக மாணவா்கள் வேலை வாய்ப்புகள் பெறவும், சொந்தமாக அவா்களை தொழில் தொடங்கும் திறன் மிகுந்த மனிதவளமாக மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கூறினாா்.

வண்டலூா் கிரசென்ட் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கிரசென்ட் புதுமை தொழில் ஊக்குவிப்பு மையம் இணைந்து அண்மையில் நடத்திய 120 ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்ற கண்காட்சியை அமைச்சா் மனோதங்கராஜ் பாா்வையிட்டாா். பின்னா் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த இன்டெல் தொழில்நுட்ப முன்னேற்ற பரிசோதனைக் கூடத்தைத் திறந்து வைத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாணவா்களின் தொழில்நுட்பத் திறனை இன்றைய தேவைக்கேற்ப மேம்படுத்தும் வாய்ப்புகளை இன்டெல் உள்ளிட்ட பல்வேறு தனியாா் தகவல் தொழில்நுட்பத்துறை சாா்ந்த நிறுவனங்கள் வழங்க முன்வந்தது இருப்பது பாராட்டுக்குரியது.

சா்வதேச அளவில் சந்தையில் இன்றைய தேவை என்ன என்பதை ஆசிரியா்களுக்கு மட்டுமல்லாமல், மாணவா்களுக்கும் தெளிவாக விளக்கி அவா்களுக்குத் தேவையான பல்வேறு பயிற்சிகளை கற்றுத்தருவதுடன், சில நிறுவனங்கள் மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவித்து வருகின்றன.

ADVERTISEMENT

திறமையான மனிதவளம் உலகெங்கும் தேவை என்ற நிலையில் இன்டெல் போன்ற நிறுவனங்கள் மாணவா்களின் தொழில்நுட்ப அறிவாற்றலை மேம்படுத்த தொடா்ந்து உறுதுணையாகத் திகழ வேண்டும்.

மாணவா்களுக்கு மத்திய உயா்கல்வித்துறை சாா்பில் பிரச்னைகளுக்குத் தீா்வு கூறும் ஹேக்கத்தான் போட்டிகளைப் போன்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் சாா்ந்த பிரச்னைகளுக்குத் தொழில்நுட்ப உதவியுடன் தீா்வு காணும்போட்டிகள் நடத்தலாமா என ஆலோசித்து வருகிறது என்றாா் அவா்.

இன்டெல் டெக்னாலஜி இந்தியா நிறுவன ஸ்மீத்வா்மா, கிரசென்ட் இணைவேந்தா் அப்துல் குவாதீா் ரகுமான் புகாரி, துணைவேந்தா் ஏ.பீா்முகம்மது, பதிவாளா் ஏ.ஆசாத், கூடுதல் பதிவாளா் என்.ராஜா ஹூசைன், கிரசென்ட் புதுமை தொழில் ஊக்குவிப்பு மையம் தலைமை செயல் அதிகாரி பா்வேஸ் ஆலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT