தமிழ்நாடு

நகைகளை உருக்கும் திட்டத்தில் துளியளவும் தவறு நடக்காது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு திட்டவட்டம்

30th Sep 2021 02:28 AM

ADVERTISEMENT

 

சென்னை: கோயில் நகைகளை உருக்கி அவற்றை பயன்படுத்தும் திட்டத்தில் துளியளவும் தவறு நடக்காது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்குச் சொந்தமான 49 கிரவுண்ட் நிலம், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது. ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்கப்பட்ட இந்த இடம் கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, செய்தியாளா்களுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பேட்டி:

ஏகாம்பரநாதா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை வேறு பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென தனியாா் கட்டட வல்லுநா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை பெற்றதும் முடிவெடுக்கப்படும். இந்த இடத்தை ஆக்கிரமித்தவா்கள் ரூ.12 கோடி வாடகை செலுத்த வேண்டியுள்ளது. அதனைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ADVERTISEMENT

ரூ.1,000 கோடி சொத்து மீட்பு : திமுக அரசு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துக்குச் சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மீட்கப்பட்ட இடங்களில் மேலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளன.

தவறான பிரசாரம்: கரோனாவை கட்டுப்படுத்தவே வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. வாரத்தில் மூன்று நாள்கள் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கோயில்களைத் திறப்பதில் பாரபட்சம் கிடையாது. ஆனால், இந்து கோயில்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக தவறான பிரசாரம் செய்யப்படுகிறது.

தங்கத்தை உருக்கும் திட்டம்: சமயபுரம் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட போது அதிகளவு நகைகளைக் கட்டி வைத்திருந்தனா். கடந்த 10 ஆண்டுகளாக நகைகள் அப்படியே இருப்பதாகத் தெரிவித்தனா். இதனை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். பயன்பாட்டில் இல்லாத நகைகளை மட்டுமே உருக்கத் திட்டமிட்டுள்ளோம். மன்னா்கள், ஜமீன்தாரா்கள், அறங்காவலா்கள் கொடுத்த நகைகளை உருக்க முயற்சிக்கவில்லை.

நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு நகைகளைக் கணக்கிடும் பணி நடைபெறவுள்ளது. நகைகளைப் பிரித்து முழுமையாக விடியோ பதிவு செய்யப்படும். மத்திய அரசுக்குச் சொந்தமான மும்பையில் உள்ள நிறுவனத்திடம் அளித்து சுத்தத் தங்கக் கட்டிகளாக பெறப்படும். அவற்றை வைப்பு வங்கியில் வைத்தால் வட்டித் தொகை பெரிய அளவில் கிடைக்கும் என்கிறாா்கள்.

இந்த வட்டிப் பணத்தைக் கொண்டு கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள முடியும். இந்தத் திட்டத்தில் துளியளவு கூட தவறு நடக்காது என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு. இந்த நிகழ்வின் போது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் ஜெயராமன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT