தமிழ்நாடு

தமிழகத்தின் தியாக தீபங்கள் - 47: ஆர்.வேலுமயில் தேவர்

30th Sep 2021 05:05 AM | -த. ஸ்டாலின் குணசேகரன்.

ADVERTISEMENT

 

தமிழக அளவில் தாக்கத்தை உருவாக்கிய ஆகஸ்ட் போராட்ட நிகழ்வுகளான கோவை-சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு,  சூலூர் விமானதளத் தகர்ப்பு ஆகியவற்றில் அதிகம் பேர் பங்கேற்ற ஊர் "இருகூர்'. அக்காலத்தில் கிராமமாக இருந்த இவ்வூர் கோவை நகரத்துக்கு 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

இரண்டுமே மக்கள் எழுச்சியால் சம்பவித்த சரித்திர நிகழ்வுகள். இதற்கு வடிவம் கொடுத்தவர்கள், இதனை வழிநடத்தியவர்கள் தொழிலாளர் தலைவர் என்.ஜி. ராமசாமி, கண்ணம்பாளையம் கே.வி. ராமசாமி, கே.பி. திருவேங்கடம் உள்ளிட்ட தலைவர்கள். இருகூரிலும் பக்கத்து ஊர்களிலும் வசித்தவர்களில் பெரும்பாலானோர் கோவையிலுள்ள பஞ்சாலைகளில் வேலை செய்தவர்கள். அங்கு ஏற்பட்ட தொடர்புகளாலும் தொழிற்சங்க நடவடிக்கைகளாலும் நாட்டு நடப்புகள் குறித்தும் விடுதலைப் போராட்டம் பற்றியும் அறிந்து கொண்டவர்கள்.

இருகூரில் மட்டும் 41 போராளிகள் தண்டனை பெற்றவர்களாக விளங்கியுள்ளனர். பங்கேற்றவர்கள் இன்னும் பலர். கள்ளுக்கடைக்குத் தீ வைத்த வழக்கிலும் விமான நிலையத் தகர்ப்பு வழக்கிலுமாகச் சேர்த்து இருகூரைச் சேர்ந்த ஆர்.வேலுமயில் தேவருக்கு 27 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. அலிப்பூர் சிறையில் நான்காண்டுகள் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கும் தேசியத் தலைவர்களுக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தலைவர்கள் பலர் விடுவிக்கப்பட்ட சூழலில் 12.05.1946-ஆம் தேதி விடுதலையானார் வேலுமயில் தேவர்.

ADVERTISEMENT

எ.சாமியப்ப தேவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. இருகூர் போராளிகளில் இவர் ஒருவருக்கு மட்டும்தான் அப்போது திருமணமாகியிருந்தது. மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை விட்டுவிட்டு சிறையிலிருந்தார். மற்ற 40 பேரும் விடுதலைக்குப் பிறகுதான் திருமணம் செய்து கொண்டனர்.

வை.கிரி கிருஷ்ணன் தனி நபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்று இருகூரிலிருந்து பல மாவட்டங்களில் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்தவாறே நடைப் பயணமாகச் சென்று சென்னையில் காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது கைது செய்யப்பட்டார். சென்னை சிறையில் ஆறு மாதங்கள் வைக்கப்பட்டிருந்தார். விடுதலையான மூன்றாம் நாளே இருகூரில் யுத்த நிதி வசூலிக்க மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை நடைபெறவிடாது தடுக்கக் கிளர்ச்சி செய்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருந்தார்.

கே.அங்கணத் தேவரின் வீட்டில் புகுந்த போலீஸ் அவரின் இருப்பிடத்தைக் கேட்டு பெற்றோரைத் தாக்கியதோடு அவரது திருமணத்திற்காக வீட்டில் வைத்திருந்த பொருள்கள் அனைத்தையும் வீதியில் கொண்டுவந்து குவித்து தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். பின்னர் பிடிபட்ட இவர் ஆறு மாதங்கள் சிறையிலிருந்துள்ளார். திருமணம் நின்றுபோனதால் விடுதலைக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார்.

"கோவை, சிங்காநல்லூர், இருகூர்,  சூலூர் , கண்ணம்பாளையம் பகுதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 200- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டு இரண்டு ஜென்ம தண்டனையிலிருந்து இரண்டாண்டு தண்டனை வரை தீர்ப்பாகியிருந்தது'என்று ஆர்.வேலுமயில் தேவர் பதிவு செய்துள்ளார். 

விடுதலைப் போர்க்களத்தில் தமிழகத் தொழிலாளர்களின் பங்கு வீரீயம் மிக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT