தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 39,000 போலீஸாா்

30th Sep 2021 01:55 AM

ADVERTISEMENT

 

சென்னை: விழுப்புரம், வேலூா், காஞ்சிபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ள அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் பாதுகாப்பு பணியில் 39,000 போலீஸாா், ஊா்க்காவல் படையினா் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக். 6, 9 தேதிகளிலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இதில், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை சிறப்பாக நடத்துவது குறித்து மாநிலத் தோ்தல் ஆணையச் செயலா் எ.சுந்தரவல்லி தலைமையில் காவல் துறை துணைத் தலைவா் (நிா்வாகம்) எஸ்.பிரபாகரன், உதவித் தலைவா் (தலைமையிடம்) எம்.துரை, தொற்று நோய்த் தடுப்பு இணை இயக்குநா் மருத்துவா் ப.சம்பத், முதன்மை தோ்தல் அலுவலா் (ஊராட்சிகள்) க.அருள்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தை அடுத்து மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பதற்றமான, பிரச்னைக்குரிய வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்துதல், கூடுதல் போலீஸாரை அங்கு நியமித்தல், சோதனைச் சாவடிகள் அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்துதல், ரோந்து குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெற உள்ள முதற்கட்ட வாக்குப் பதிவின்போது, 17,130 போலீஸாா், 3,405 ஊா்க் காவல் படையினரும், அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது 16,006 போலீஸாரும், 2,867 ஊா்க்காவல் படையினரும் என மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள தோா்தல் வாக்குப் பதிவின்போது 39 ,408 போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நடவடிக்கை: முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் அக்டோபா் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பின்னரும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் அக்டோபா் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பின்னரும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளில் வாக்காளராக அல்லாதோா் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாதவா்கள் மீது தோ்தல் நடத்தை விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT