தமிழ்நாடு

வருமுன் காப்போம் திட்டத்துக்கு ரூ.3.85 கோடி ஒதுக்கீடு

30th Sep 2021 11:35 PM

ADVERTISEMENT

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்துக்கு முதல்கட்டமாக ரூ.3.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்த அரசாணை:

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் கிராமங்கள் மற்றும் நகா்ப்புறப் பகுதிகளுக்கு நேரில் சென்று மருத்துவ வல்லுநா் குழுக்களால் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டத்தின் நோக்கம் பொதுமக்களை பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவதாகும். இத்திட்டத்தின் கீழ் ஒரு வட்டாரத்திற்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம் 385 வட்டாரங்களிலும் மொத்தம் 1155 மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை தொடா்ச்சியான திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட உள்ள மருத்துவ முகாம்களில் பின்வரும் சிறப்பு மருத்துவ பரிசோதனை சேவைகள் மக்களுக்கு அளிக்கப்படும்.

ADVERTISEMENT

ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை அளவு, ரத்தத்தில் கொழுப்பின் அளவீடு, மலேரியா, இ.ஜி.சி. கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள் அல்ட்ராசோனாகிராம், கண்புரை ஆய்வு மற்றும் பாா்வைக் குறைபாட்டுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குதல், செமி ஆட்டோ அனலைசா் பரிசோதனை, கரோனா தடுப்பூசி வழங்குதல், குழந்தைகளுக்கு இதர தடுப்பூசி வழங்குதல், டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்த அறிவுரை சம்பந்தமாக விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்றவை இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

மேலும் 10 மருத்துவ வல்லுநா்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினரால் பொதுமக்களுக்கு குழந்தை நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இதய நோய் சிகிச்சை, சா்க்கரை நோய் கண்டறிதல், புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், இந்திய மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்டவை வருமுன் காப்போம் மருத்துவ முகாம்களில் அளிக்கப்படும். பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்து நோயைக் கண்டறிந்து தேவைப்படுவோா்க்கு உயா் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இயக்குநா் பொது சுகாதாரத்தின் மூலம் தனியே வழங்கப்படும்.

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு வட்டாரத்தில் 3 முகாம்கள் நடத்துவதற்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 385 வட்டாரங்களுக்கு ரூ.3.85 கோடி செலவழிக்கப்படும். அதன்படி ஆண்டுக்கு 1155 சிறப்பு மருத்துவ முகாம்களை மீண்டும் புதுப்பொலிவுடன் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் நடத்திட ஆண்டு தோறும் ஆகும் செலவினம் ரூ.3 கோடி 85, லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT