தமிழ்நாடு

பூம்புகார் சுற்றுலா தலத்தை மேம்படுத்த மிகப் பெரிய திட்டம்

30th Sep 2021 04:45 AM

ADVERTISEMENT

 

பூம்புகார்: மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சுற்றுலா தலத்தை மேம்படுத்த மிகப் பெரிய திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது என்றார் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன்.
பண்டைய தமிழர்களின் பெருமைகளை வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள ஏதுவாக கடந்த 1972 -இல் பூம்புகாரில் சிலப்பதிகார கலைக்கூடம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக பூம்புகார் சுற்றுலா தலம் போதிய பராமரிப்பின்றி பொலிவிழந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின், பூம்புகார் சுற்றுலா தலத்தை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பூம்புகாருக்கு புதன்கிழமை வந்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், இங்கு கடந்த ஆண்டு ரூ. 2.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டுவரும் அலுவலகம், உணவகம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, சிலப்பதிகார கலைக்கூடம், பாவை மன்றம், இலஞ்சி மன்றம், கடற்கரை நெடுங்கல் மன்றம், சங்கு குடில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை நடந்துசென்று ஆய்வுசெய்தார். பிறகு சுற்றுலா அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:
தமிழக முதல்வரின் அறிவுரைப்படி, தமிழகம் முழவதும் சுற்றுலா வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பூம்புகார் சுற்றுலா தலத்தை முழுவதுமாக புனரமைக்க சுற்றுலாத் துறை முலம் மிகப் பெரிய திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் ஒப்புதலைப் பெற்று அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், சீர்காழி தொகுதியில் உள்ள கொடியம்பாளையம், தொடுவாய் ஆகிய பகுதிகளை  சுற்றுலா தலங்களாக மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
ஆய்வின்போது, சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப்நந்தூரி, மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பூம்புகார் நிவேதாமுருகன், சீர்காழி பன்னீர்செல்வம், ஒன்றியக் குழுத் தலைவர் கமலஜோதி தேவேந்திரன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் சசிக்குமார், பிரபாகரன், சீர்காழி நகரச் செயலாளர் சுப்பராயன், மாவட்ட சுற்றுலா அலுவலர் மாதவன் ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT