தமிழ்நாடு

ஜவ்வரிசி உற்பத்தியில் சேலத்தை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை

30th Sep 2021 04:54 AM

ADVERTISEMENT

ஆத்தூர்: ஜவ்வரிசி உற்பத்தியில் சேலம் மாவட்டத்தைச் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். 
சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிநவீன ஜவ்வரிசி ஆலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நாட்டில் வேறெங்கும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக பல்வேறு தரப்பினரையும் மாவட்டந்தோறும் சென்று சந்தித்துப் பேசி, அதற்குப் பிறகே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், மரவள்ளிக் கிழங்கு பயிரிடும் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து நிச்சயம் நிறைவேற்றப்படும். பொதுமக்களுக்கு நியாயமான விலையில் ஜவ்வரிசி கிடைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.  
ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு புதிய சேமிப்புக் கிடங்கு, ஜவ்வரிசியை உணவுப் பொருளாகப் பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ஜவ்வரிசியில் கலப்படத்தைத் தடுக்கக் குழு அமைக்கப்படும்.
திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நான்கு மாதங்களில் தமிழகத்தில் தொழில் துறை புத்துணர்வு அடைந்துள்ளது. தெற்காசிய அளவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிடும் வகையில் புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய தொழில்களை ஈர்க்கும் வகையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, ரூ. 17,149 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 
இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு மூன்றாவது பெரிய மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டை முதலிடத்துக்குக் கொண்டுவரும் வகையில் ஏற்றுமதிக் கொள்கை அமைக்கப்படும். திருப்பூர், மதுரை, கோவை உள்ளிட்ட 10 ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்படும். நகரம் } கிராமம்  என்ற வேறுபாடின்றி, பெருந்தொழில் } சிறு தொழில் பேதமின்றி, தொழில் கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கு தொழிலதிபர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 
ஜவ்வரிசி உற்பத்தியில் பெயர் பெற்று விளங்கும் சேலம் மாவட்டத்தைச் சர்வதேசத் தரத்தில் உயர்த்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT