தமிழ்நாடு

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்

30th Sep 2021 04:34 AM

ADVERTISEMENT


சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் "கலைஞரின் வருமுன் காப்போம்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம், தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை காலை சேலம் வந்தார். அவருக்கு சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ஆர்.ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி,  சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ஆ.ராஜா உள்ளிட்ட கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து வாழப்பாடி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஓராண்டில் 1,250 மருத்துவ முகாம்களை நடத்துவதன் ஒரு பகுதியாக, இத் திட்டத்தைத் தொடக்கி வைத்து மருத்துவ அரங்குகளை அவர் பார்வையிட்டார். மேலும்,  பொதுமக்களிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள், 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைந்த 5 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு நற்சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

கரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த 54 குழந்தைகளுக்கு ரூ. 1.62 கோடி நிவாரண நிதி,  ரூ. 10.20 கோடி மதிப்பில் 21 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 618 உறுப்பினர்களுக்கு பயிர்க் கடன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் 6 தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் 115 குழுக்களில் உள்ள 1,443 உறுப்பினர்களுக்கு சுயஉதவிக்குழு கடனுதவிகள், பொருளாதாரக் கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் 117 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 11.25 கோடி கடனுதவி என மொத்தம் ரூ. 24.73 கோடி மதிப்பில் கடனுதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: கடந்த மாதம் நிதிநிலை அறிக்கையில் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கி 1,000 முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1,250 சிறப்பு முகாம்கள் நடத்த முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த முகாம்களில் பலமுனை மருத்துவப் பரிசோதனை, கண், பல், காது-மூக்கு-தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் ரத்தழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள், சிறுநீரகக் கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கர்ப்பிணிகள், பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் மற்றும் புற்றுநோய் மருத்துவம் போன்ற 17 பிரிவுகள் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்படும்.
தமிழகத்தில் 385 வட்டங்கள் உள்ளன. ஒரு வட்டத்துக்கு 3 முகாம்கள் வீதம் 1,155 முகாம்கள் நடத்தப்படும். சென்னை நீங்கலாக உள்ள 20 மாநகராட்சிகளில் தலா 4 முகாம்கள் நடத்தப்படும். சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 15 முகாம்கள் என மொத்தம் 1,250 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 
இந்த முகாம்களில் நோய்களைக் கண்டறிந்து மருந்து, மாத்திரை வழங்கப்படும். தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 12.50 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். வருமுன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துடன் இணைக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் தாரேஸ் அகமது, சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன், எம்.பி.க்கள் கௌதமசிகாமணி (கள்ளக்குறிச்சி), எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), திமுக நிர்வாகிகள் டி.எம்.செல்வகணபதி, வீரபாண்டி ஆ.ராஜா, எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT