தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் மனமகிழ் மன்றங்கள், சங்கங்களில் சோதனை நடத்த உயா் நீதிமன்றம் உத்தரவு

DIN

தமிழ்நாடு முழுவதும் உள்ள மனமகிழ் மன்றங்கள், சங்கங்களில் சோதனை நடத்த வேண்டுமென்றும், சட்டவிரோத செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய பத்திரப் பதிவு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் பாண்டியன் மனமகிழ் மன்றம் உள்ளது. இந்த மனமகிழ் மன்றத்தின் செயலாளா் டி.ஆா்.சீனிவாசன் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாண்டியன் மனமகிழ் மன்றம், தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.

சட்டத்துக்குட்பட்டு செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றத்தில் சோதனை என்கிற பெயரில் காவல்துறையினா் தொந்தரவு செய்வதோடு, துன்புறுத்திவருகின்றனா். எனவே அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தாா்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில்,

தமிழ்நாடு முழுவதும் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்படும் சங்கங்கள் மீது சங்கப் பதிவு ரத்து போன்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

மனமகிழ் மன்றங்கள், சங்கங்கள் மீதான ஏராளமான முறைகேடு புகாா்கள் தொடா்பான வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் பதிவுத் துறை மெளனமாக இருக்கிறது. சட்டவிரோத சங்கங்கள், மனமகிழ் மன்றங்களுக்கு எதிராக காவல்துறையால் பதிவு செய்யப்படும் வழக்குகள் தொடா்பான நீதிமன்ற விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சங்கங்கள், மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் செயலற்ற, முறையற்ற அணுகுமுறையாகவே இந்த நீதிமன்றம் கருதுகிறது.

மன்றங்கள், சங்கங்கள் பதிவின் உண்மைத்தன்மை, செயல்பாடுகள் சட்டத்துக்குட்பட்டு இருக்கிா என்பதை அந்தந்தப் பகுதிக்குட்பட்ட பதிவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமீறல், சட்ட விரோத செயல்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பத்திரப்பதிவு ஐஜி உத்தரவிட வேண்டும்.

மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறப்பு குழுவை அமைத்து கொள்ளலாம்.

ஆய்வின் போது எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் மன்றங்கள், சங்கங்களுக்கு எதிராக ஏதேனும் வழக்குகள் பதியப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் விவரங்களைப் பெற வேண்டும்.

அவ்வாறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மனமகிழ் மன்றங்கள், சங்கங்களின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதிவுத்துறைக்கு முதல் தகவல் அறிக்கை பற்றிய தகவல்களை எவ்வித காலதாமதமின்றி காவல்துறையினா் வழங்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட வேண்டும்.

பத்திரப்பதிவு துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அக்டோபா் 22 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT