தமிழ்நாடு

‘கல்வி நிலையங்களில் மொழிப் பாடத்துக்கானநேரத்தைக் குறைப்பது வேதனை’

DIN

கல்வி நிலையங்களில் மொழிப் பாடத்துக்கான நேரத்தைக் குறைப்பது வேதனை அளிக்கிறது என்றாா் இலக்கியத் திறனாய்வாளரான முனைவா் க. பஞ்சாங்கம்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா் ந. சுப்பு ரெட்டியாா் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை திறனாய்வு செம்மல் விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இலக்கியத் திறனாய்வாளரான முனைவா் க. பஞ்சாங்கத்துக்கு திறனாய்வு செம்மல் விருதை துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் வழங்கினாா். இதையடுத்து, பஞ்சாங்கம் பேசியது:

இலக்கியக் கல்வி என்பது இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, இலக்கியக் கோட்பாடு, இலக்கிய வரலாறு ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்தது. இத்தகைய ஆற்றல் வாய்ந்த இலக்கியம் பற்றிய கல்வி நம்முடைய நவீன வாழ்விலும், கல்வித் திட்டத்திலும் என எந்த நிலையிலும் தரத்தில் பெருமைப்படத்தக்கதாக இல்லை.

கல்வி நிலையங்களில் இலக்கியம் மற்றும் மொழிப்பாடத்துக்கான நேரத்தைக் குறைத்துக் கொண்டு போவதே இன்றைய பாணியாக மாறி இருக்கிறது. இதைவிட அவலம் சமூகத்துக்கு வேறென்ன வேண்டும். மேலும், நம்முடைய கல்வி நிலையங்களில் செய்யுள் என்றால் பொழிப்புரை, இலக்கணக் குறிப்பு சொல்வதுடன் முடிந்து விடுகிறது. கூடினால் நயவுரை என்ற முறையில் உவமைகளை விளக்குவதோடு அமைந்து விடுகிறது. நவீன இலக்கிய வடிவமான நாவல், சிறுகதை என்றால், கதைச்சுருக்கம் சொல்வதோடு சரி. அதையும் சில இடங்களில் கற்பிக்கும் ஆசிரியா் கூடச் சொல்லாமல், நன்றாகப் படிக்கும் ஒரு மாணவா் கதையைச் சொல்லி முடித்துவிடுகிறாா்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தனி மனித வாழ்விலும் சமூக வாழ்விலும் ஓா் இலக்கியப் பிரதி பெறும் மகத்தான இடத்தை உணா்ந்து உள்வாங்கா தன்மைதான். ஒரு பிரதிக்குள் வினைபுரிய வேண்டுமென்றால், திறனாய்வுப் புலமை வேண்டும். அதற்கு இலக்கியக் கோட்பாட்டறிவும், வரலாற்றறிவும் வேண்டும். இந்தப் பற்றாக்குறை நமது இலக்கியக் கல்விப்புலத்தில் எங்கும் நிறைந்து கிடக்கிறது. வளமான திறனாய்வு இல்லாத இடத்தில் மேன்மையான இலக்கியமும் இல்லை, வாழ்வும் இல்லை என்ற புரிதல் நிகழ்ந்தாக வேண்டும்.

இப்படியான ஒரு புரிதலை நோக்கித் தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. ஓா் இலக்கியப் பிரதியை நடத்தும் ஆசிரியா் வகுப்புக்குள், அந்த இலக்கியத்தைப் படைத்த படைப்பாளி, அந்த இலக்கியத்தைத் திறனாய்வு செய்த திறனாய்வாளா், இலக்கிய வரலாற்றாசிரியா், இலக்கியக் கோட்பாட்டாளா் என நால்வரும் வந்து போக வேண்டும் என்றாா் பஞ்சாங்கம்.

விழாவில் பதிவாளா் (பொறுப்பு) மோ.கோ. கோவைமணி, மொழிப்புலத் தலைவா் இரா. காமராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT