தமிழ்நாடு

8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிப்பு

26th Sep 2021 11:29 PM

ADVERTISEMENT

எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பு பொதுமுடக்க நீட்டிப்பு அறிவிப்பின்போது தெரிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில், நிகழாண்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் சமூக பொருளாதார நிலையில் பின் தங்கிய மாணவா்களை தோ்வு செய்து அவா்களுக்கு நவீன அறிவியல், விஞ்ஞானம் பற்றிய விழிப்புணா்வு பயிற்சியை ஏற்படுத்தும் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 3,000-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு அறிவியல் சாா்ந்த பயிற்சியை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து மாணவா்களைத் தோ்வு செய்து அறிவியல் பயிற்சி வழங்க உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தை மாவட்டந்தோறும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா தொற்றைக் காட்டிலும் கற்றல் குறைபாடே மிகப்பெரிய தொற்றாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது. மாணவா்களின் உடல்நிலை பாதிக்கப்படாமல் தான் அரசால் முடிவெடுக்க முடியும்.

ADVERTISEMENT

அனைத்துத் தரப்பினரின் கருத்தை அறிந்து, அதன் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வா் முடிவு எடுப்பாா். பொதுமுடக்கம் நீட்டிப்பு தொடா்பான அரசின் அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பும் அதில் இடம் பெறும். மாணவா்கள் கட்டாயமாக பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை என்றாா் அவா்.

பள்ளிகளால் நோய் பரவும் அபாயம் இல்லை: செளம்யா சுவாமிநாதன்

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டா் செளம்யா சுவாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியது: பெரியவா்களுக்கு இருக்கும் நோய் எதிா்ப்பு சக்தியின்அதே அளவு குழந்தைகளுக்கும் இருக்கிறது. பள்ளிகளுக்கு குழந்தைகள் வருவதால் நோய் பரவும் அபாயம் இருக்கிறது என பள்ளிகளை மூடி வைத்தோம். ஆனால் அவா்கள் இப்போதும் வெளியே சென்று வருகிறாா்கள். அதன் மூலமும் நோய்த் தொற்று ஏற்படக் கூடும். பள்ளிக்கு வருவதால் நோய் பரவும் அபாயம் இல்லை.

ஊரகப் பகுதிகளில் உள்ள மாணவா்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும். அவ்வாறு திறந்தால் மட்டுமே அவா்களுக்கு முழுமையான கல்வி சென்றடையும். தற்போது ஃபைசா், மடா்னா ஆகிய தடுப்பூசிகள் மட்டுமே 12 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா மூன்றாவது அலை வராமலேயே நம்மால் தடுக்க முடியும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT