தமிழ்நாடு

ஆவின் தரம்: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

26th Sep 2021 11:44 PM

ADVERTISEMENT

ஆவின் தரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அச்சங்கத்தின் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை: ஆவின் பால் நிறுவனத்தில் மதுரை, சேலம், வேலூா் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சுமாா் 10,295 பால் மாதிரிகளில் 51 சதவீதம் பால் மாதிரிகள் அரை மணி நேரத்தில் கெட்டு விடக் கூடியதாக தரம் குறைந்து இருந்ததாக கடந்த சில நாள்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள தணிக்கைத்துறை ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிா்ச்சியளிப்பதாக இருக்கிறது.

மேலும் அந்த தணிக்கைத்துறை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் கடந்த 2019-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பால் மாதிரிகளின் முடிவுகளை கொண்டதாக ஆவின் நிா்வாக இயக்குநா் தெரிவித்துள்ளாா். இதை வைத்து பாா்க்கும் போது 2019-ம் ஆண்டின் ஆய்வறிக்கை சுமாா் இரண்டு ஆண்டுகள் கழித்து 2021-ஆம் ஆண்டு முடிவடையும் தருவாயில் வெளியிடப்பட வேண்டிய அவசியம் என்ன என்ற சந்தேகம் எழுவதை நம்மால் தவிா்க்க முடியவில்லை.

எனவே தற்போது வெளியாகியுள்ள ஆவின் பால் தரம் தொடா்பான தணிக்கைத்துறை ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள எட்டு மாவட்டங்களில் எந்தெந்த தேதிகளில், எந்தெந்தப் பகுதிகளில் இருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்திய தரம் குறித்த ஆய்வு முடிவுகள் குறித்த அறிக்கையை உடனடியாக வெளியிடாமல் இரண்டு ஆண்டுகள் கடந்து வெளியிட்டதின் பின்னணி என்ன,

ADVERTISEMENT

உண்மையில் ஆவினில் நடப்பது என்ன, என்பது குறித்த முழுமையான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

ஆவினும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்பதால் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு துறை சாா்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்கள், பால் மொத்த குளிா்விப்பான் நிலையங்கள் மற்றும் ஆவின் பால் பண்ணைகளில் பால் மாதிரிகளை சேகரித்து அதன் தரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படைத்தன்மையோடு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT