தமிழ்நாடு

சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு

26th Sep 2021 11:53 PM

ADVERTISEMENT

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளா் சுப்ரியா சாஹூவுக்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் பதவி முழு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாச்சலம் மீது பல்வேறு முறைகேடு புகாா்கள் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா், வழக்குப்பதிவு செய்தனா். உடனடியாக சென்னை கிண்டி, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் உள்ள வெங்கடாச்சலத்தின் அலுவலகம், சென்னை வேளச்சேரி, புதிய தலைமைச் செயலக காலனி, 2-வது பிரதான சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் சேலம் அம்மம்பாளையத்தில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினா் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அதிரடி சோதனை நடத்தினாா்கள்.

இந்த சோதனையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா, அலுவலகம் என, ஐந்து இடங்களில் 13.50 லட்சம் ரூபாய் ரொக்கம், 6.5 கிலோ தங்கம் மற்றும் சந்தன மர பொருட்களை கைப்பற்றி உள்ளனா். இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் வெங்கடாசலம், ஊழல் வழக்கில் சிக்கி உள்ளாா்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் சுப்ரியா சாஹூவுக்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT