தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் விழிப்போடு செயல்பட வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

DIN


காஞ்சிபுரம்: உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவின் போதும்,வாக்கு எண்ணும் மையத்திலும் அதிமுகவினர் விழிப்போடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. 

காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: 
தமிழகத்தில் 35 லட்சம் முதியோர்கள் மாத உதவித்தொகை பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் தரப்படும் ரூ.1000த்தை ரூ.1,500 ஆக உயர்த்தி தருவோம் என்றார்கள், தரவில்லை. அதோபோன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக சொன்னது. அதையும் இதுவரை தரவில்லை. மாதம் தோறும் சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் தரப்படும் என்றனர். கல்விக்கடனையும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 5 சவரனுக்கு கீழே உள்ள அடமான நகைக்கடன்கள் அனைத்தையும் ரத்து செய்வோம் என்றார்கள். செய்யவில்லை. விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும் சொன்னார்கள். அதையும் இதுவரை செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றார்கள். ஆட்சிக்கு வந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ஒரு சிலவற்றைத் தவிர திமுக வேறு எதையும் நிறைவேற்றவில்லை.

இதன் மூலம் முதியோர்கள், குடும்பத் தலைவிகள், மாணவர்கள், விவசாயிகள் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. ஆனால், அதிமுக அரசு விவசாயிகள் பயிர்க்கடன்களில் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்தது. தாலிக்குத் தங்கம் 4 கிராமாக இருந்ததை 8 கிராமமாக உயர்த்தி வழங்கினோம். 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தி மருத்துவம், பல் மருத்துவம் படிக்க காரணமாக இருந்தோம். 52 லட்சம் மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினிக்களை இலவசமாக வழங்கினோம். குடிமராமத்து திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ஏரிகளை தூர்வாரியதால் வேளாண்மை செழித்தது. இதுபோன்ற பல நல்ல மக்கள் நலத்திட்டங்களால் அதிமுகவுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. 

அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதால் திமுகவின் செல்வாக்கு சரிந்திருக்கிறது.

தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி திமுக ஆட்சிக்கு வந்ததால் மக்கள் அக்கட்சியை நம்பத் தயாராக இல்லை. 

எனவே உள்ளாட்சித் தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற நினைக்கும். கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அப்படித்தான் வெற்றி பெற நினைத்தார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் வாக்குப்பதிவின் போதும், வாக்கு எண்ணும் போதும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். வாக்குப்பெட்டியை லாரியில் ஏற்றிய பிறகு தான் வீட்டுக்கு செல்ல வேண்டும். அதுவரை யாரும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு சென்று விடக்கூடாது. 

ஏனெனில் திமுகவினர் வாக்குப்பெட்டியை மாற்றினாலும் மாற்றி விடுவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் வீடு,வீடாக சென்று வாக்கு சேகரியுங்கள் என்றும் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,கோகுலஇந்திரா, காமராஜ், பா.பென்ஜமின், முன்னாள் எம்.பி.காஞ்சி.பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத்.பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு,கே.பழனி ஆகியோர் உள்பட கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT