தமிழ்நாடு

வானுயர வள்ளுவர் சிலை; வேலை கொடுக்க டைடல் பார்க்.. பசிக்கு உணவு: முதல்வரின் சரவெடி பேச்சு

DIN

வானுயர வள்ளுவருக்குச் சிலையும் வைப்போம் - இலட்சக்கணக்கானவர்க்கு, வேலை கொடுக்க டைடல் பார்க்கும் அமைப்போம் - அதே நேரத்தில் ஏழைகளின் பசிக்கு உணவும் அளிப்போம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

காது கேளாதோர் வாரத்தையொட்டி மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக ரூ.98.80 இலட்சம் மதிப்புள்ள உயர்தர செவித் திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவ மையத்தை திறந்து வைத்து முதல்வர் ஆற்றிய உரையில், உலக காதுகேளாதோர் வாரம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 20 முதல் 26 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வானுயர வள்ளுவருக்குச் சிலையும் வைப்போம் - இலட்சக்கணக்கானவர்க்கு, வேலை கொடுக்க டைடல் பார்க்கும் அமைப்போம் - அதே நேரத்தில் ஏழைகளின் பசிக்கு உணவும் அளிப்போம்.

இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதையும் மறக்காமல் வழங்குவோம். இதுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசின் இலட்சியமாக இருக்கிறது. வானளாவிய வளர்ச்சி - பல்லாயிரம் கோடி திட்டங்கள் - பறக்கும் சாலைகள் ஆகியவை ஒரு பக்கம் அமைத்தாலும் - இன்னொரு பக்கத்தில் குடிசைகளை மாற்றி அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்ற அந்த நிலையிலும் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்.

காதுகேளாதவர்க்குக் கருவி மாட்டுவோம். இதுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு. பெரிய விஷயங்களைப் பார்க்கும் போது சின்ன விஷயங்கள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள். அது தவறானது, 'திராவிட மாடல்' ஆட்சியில் பெரியவை மட்டுமல்ல சின்னவையும் தெரியும். அனைவரது கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது.

இந்த உயரிய நோக்கத்தை மொத்தமாகச் செயல்படுத்துவதற்காகத்தான் 2009- ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்தார்கள்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காது நுண் எலும்புக் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை இதுவரையில் 4,101 குழந்தைகளுக்குச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 327 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சைக்காக 6 லட்சத்து 36 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அறுவைச் சிகிச்சை செய்ய இயலாத குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை செய்யப்படுகிறது. அதற்கு 4 கோடி ரூபாய் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழுதடைந்த உபகரணங்களை மாற்றித் தருவதற்காக 3.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 572 பேருக்கு 108 கோடி ரூபாய் செலவில் புதிய காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை மேலும் தொடருவதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நவீன கருவிகளை வாங்குவதற்கு 10 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை, கிருஷ்ணகிரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 98.9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர செவித்திறன் கருவிகளை நான் வழங்கி இருக்கிறேன். புதிய காது கேட்கும் கருவிகளை வழங்கி இருக்கிறேன். பழுதடைந்த கருவிகள் மாற்றித்தரப்பட்டுள்ளது. புதிதாக அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் கருவிகள் தரப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு முறையான பயிற்சி மூலமாக பேசும் திறனைப் பெற்று வரும் குழந்தைகளைக் கண்டு மகிழ்கிறேன்; விரைவில் நீங்கள் முழுமையாகக் குணமடைய என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில வாரங்களுக்கு முன்பு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் அழைப்பையேற்று கிருஷ்ணகிரிக்கு சென்றேன். அங்கே மக்கள் பயன்பெறும் வகையிலே மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். இன்றைக்கு அந்தத் திட்டம்தான் தமிழ்நாடு அரசுக்குப் மிகப் பெரிய பேரும் புகழும் ஈட்டித் தந்து கொண்டு இருக்கிறது என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நாள்தோறும் கிராமம் கிராமமாக – தொகுதித் தொகுதியாக - தெருத் தெருவாக நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறையினர் சென்று - மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 10 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலமாகப் பயனடைந்துள்ளார்கள்.

மருத்துவமனைக்கு வர முடியாதவர்கள் - பணம் இல்லாதவர்கள் - தீராத நோயாளிகள் - ஆகியோருக்கு அவர்களது கவலை போக்கும் திட்டமாக இந்தத் திட்டம் இருக்கிறது. அரசைத் தேடி மக்கள் வந்த காலம் இருந்தது – இப்போது அதை மாற்றி - மக்களைத் தேடி அரசு செல்லும் காலமாக இந்த ஆட்சி உருவாக்கி இருக்கிறது. இந்த மாற்றத்துக்கு நேரம் காலம் பார்க்காமல் உழைத்து கொண்டு இருக்கக்கூடிய நம்முடைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். அந்த அளவிற்கு அவர் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்.

சட்டமன்றத்தில் எந்த அமைச்சர்களையும் எதிர்கட்சியினர் புகழ்ந்து பேசுவது கிடையாது. நம்முடைய மா.சு அவர்களை தான் சட்டமன்றத்தில் புகழ்ந்து பேசுகிறார்கள். பா.ஜ.க.வைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சட்டமன்றத்தில் மாசு இல்லாதவர் மா.சு என்று பாராட்டினார். அவருக்குத் துணை நின்று பணியாற்றி கொண்டு இருக்கக்கூடிய அதிகாரிகளையும் நான் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

“அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். அழாத பிள்ளைக்கும் பால் கொடுப்பவள்தான் உண்மையான தாய். அத்தகைய தாயாக தி.மு.க. அரசு என்றைக்கும் இருக்கும்”. தலைவர் கலைஞர் அவர்கள் ஒருமுறை சொன்னார்கள், ஏழை - எளிய விளிம்புநிலை மக்களையும் அன்போடு அரவணைத்து அவர்களுக்கு அனைத்துமாக இருக்கும் அரசாக தி.மு.க. அரசு நிச்சயம் இருக்கும் என்று சொன்னார்கள்.  அதைத்தான் நானும் வழிமொழிகிறேன் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

மே மாத பலன்கள்: மகரம்

மே மாத பலன்கள்: தனுசு

மே மாத பலன்கள்: விருச்சிகம்

மே மாத பலன்கள்: துலாம்

SCROLL FOR NEXT